Thursday, July 3, 2014

தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும் 0


”தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும்” இதில் வரும் ஆளுமைகளை பற்றி எழுதுவதற்க்கு முன்னால் எனக்கும் இதில் எப்படி ஆர்வம் வந்தது என்பதற்க்காக இந்த பதிவு.

ஒரு வாசகனுக்கு, வாசிக்கும் புத்தகம் என்ன மாதிரியான அனுபவத்தை தரும், அந்த புத்தகம் நம்மை என்ன செய்துவிடும்?

வாசிப்பு பொழுதுபோக்குக்காக என்று தான் ஆரம்பிக்கும். வாசிக்கும்போதே எழுத்தாளரின் எழுத்துக்களின் வழியாக ஒரு புதிய உலகத்தைப் பார்க்க முடிகிற அனுபவம் வரும்போது வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையில் இருந்து உயர்ந்து தன்னைச் சுற்றியுள்ளவைகளை கூர்ந்து கவனித்து உள்வாங்கிப் புரிந்துகொள்ளும் முயற்சியாகப் மாறும். நம் பார்வைகளும் மாறும்.

ஒரு நல்ல கதை அந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றி, அந்தப்பாத்திரமாகவே மாறி தன்னையே அந்தப் பாத்திரத்தில் வைத்துப் பார்க்க ஆரம்பித்து விடும்.

எனக்கும் அப்படி ஒரு கதையும் பயணமும் கிடைத்தது, சராசரி இளைஞனாக, அதிகபட்சம் வெகுஜன பத்திரிக்கைகள், வார இதழ்களில் மட்டுமே வாசிப்பு அனுபவம் இருந்த எனக்கு, முதல் தடவையாக நண்பர் பாலு மூலம் கல்கியின் "பொன்னியின் செல்வன்" என்ற வரலாற்றுப் புதினம் அறிமுகமானது, வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்னுடைய முழுமையான நேரத்தையும் மனதையும் அபகரித்து விட்டது. என் வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு நாவலை வாசிக்கத் தூண்டியது.

வார்த்தைகளின் ஆழம், நடை, கதை மாந்தர்கள் பற்றிய விவரிப்பு என கற்பனையை கிளறி முழு சோழ வளநாட்டையும் கண் முன்னே கொண்டு வந்து நான் பேசும் வார்த்தைகளில் அதீதத் தமிழ் வந்தது, என்னை சுற்றி இருந்த உலகம் மாறியது, இந்த மாற்றம் வந்தியதேவன், குந்தவை, அருள்மொழி, பூங்குழலி, அநிருத்தர் எனஅடிக்கடி சொல்ல வைத்தது, பொன்னியின் செல்வனுடனும் கதா பாத்திரங்களுடனும் இருந்தேன், அவர்களுடனே பயணித்தேன்.

குறிப்பாக வந்தியதேவனின் அறிமுகம், அவனது சேஷ்டைகளும், இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டுவதும் அதில் இருந்து தப்புவதும் என்னை வெகுவாக கவர்ந்தது, ஆகவே இந்தப் பெயரை நான் வாங்கிய "Hero Honda Passion Pro" வண்டிக்கு "வந்தியதேவன்"எனவும் என் காமிராவிற்கு "நந்தினி" எனவும் பெயர் சூட்டினேன். (நான் வண்டிவதும் வந்தியத்தேவன் சேஷ்டைகள்  போலத்தான் இருக்கும்)

"பொன்னியின் செல்வன்"க்கு பின்னர் வாசிப்பதை தினம் மிக முக்கிய வேலையாக செய்து கொண்டேன். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவாகாமியின் சபதம் என் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் போது சாண்டில்யனின் கடல்புறா வாசிக்க கிடைத்தது.

”கடல்புறா” இந்த அளவு கற்பனை செய்ய முடியுமா என நினைக்க தூண்டும் எழுத்து, கப்பலை அதன் வடிவத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தி இருப்பார் சாண்டில்யன், தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களில் கண்டிருப்போம்,  இக் கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைகளும் கதையை படிப்பதற்குத் திகட்டாமல் செய்திருப்பார். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.

”கடல்புறா” என் வாழ்க்கையை புரட்டி போட்ட புத்தகம் என சொன்னால் மிகை ஆகாது, ஆம் மெக்கானிக்கல் படித்துவிட்டு அதன் சார்ந்த வேலையில் இருந்த என்னை முழு நேர3டி டிசைனராக மாற்றியது கடல்புறா. என் கற்பனைகளை தூண்டி விட்டு பென்சில்களைக் கொண்டு கிறுக்கிக் கொண்டிருந்தவைகளுக்கு ஒரு வடிவத்தைத் தரத்தக்க தூண்டுகோலாய் இருந்த சண்டில்யனுக்கு என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

புத்தக வாசிப்பைத் தாண்டி கலைகள் மேல் இருந்த ஆர்வத்தில் அழிந்து போன கலைகளையும் / தொன்மைகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நான் "udhayam.in" என்ற இணைய தளத்தை ஆரம்பித்தேன், அதன் பின் தொன்மைகளையும் மரபு சார்ந்த விடயங்களை பற்றிய புத்தகங்களையும் ஆவணப்படுத்தும் நபர்கள் பலர் அறிமுகமாகினர். சிலர் எனக்கு அறிமுகமில்லாவிட்டாலும் அவர்களின் தொடர் உழைப்பை கேட்டும் அறிந்தும், படித்தும் இருக்கிறேன்.

இவர்களுடனான என் பயணம் நல்ல அனுபவத்தை தந்தது, என்னையும் பயணம் செய்ய தூண்டியது, நானும் ”மூதாதையரைத் தேடி பயணம்” என்ற பெயரில் புகைப்படத் தொகுப்பாக (http://udhayan-photos.blogspot.in/)குகைகள், குடைவரைகள், கோவில்கள், சிலைகள், கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், சமணத்தடங்களை தேடி பயணிக்க ஆரம்பித்தேன். நண்பர்களுடன் சேர்ந்து பழைய எழுத்து முறைகளான பிராமி, வட்டெழுத்துக்களுக்கு எழுத்துருக்கள்(Font) செய்து வருகிறேன். ஒரு புத்தகம் எவ்வளவு பெரிய மாற்றங்களை தந்தது, தரும் எனபதற்க்கு நானே ஒரு எடுத்துக்காட்டு.

ஆளுமைகளை பற்றி எழுதும் அளவிற்க்கு நான் ஆளுமை கொண்டவன் அல்ல, நான் ஒரு வாசகன், ரசிகன், புகைப்படக்காரன்,  ஒய்வு நேர களப்பணியாளன். இந்த ஆளுமைகள் எனக்கு முகவரி தந்தவர்கள், இந்த தொன்மையை தேடும் ஆர்வத்தில் இருக்கும் நபர்கள் எவரும் பணம், பதவிகளுக்காகத் தொன்மையை தேடிச் செல்வதில்லை, தொலைந்ததைத் தேடுவதிலேயே அவர்கள் உழைப்பையும் நேரத்தையும் அதிகமாய் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களை பற்றி நான் அறிந்ததை என் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவே இந்த தொடர் பதிவு.

டிஸ்கி :
  1. வெகுஜன மக்களுக்காக கொண்டு செல்லவே இந்த பதிவு.
  2. நான் முதலில் பார்த்த/தெரிந்தவர்களில் இருந்து வரிசைபடுத்த இருக்கிறேன்.
  3. எனக்கு நேரம் கிடைக்கு போது மட்டுமே எழுதுவேன்.
  4. எழுத்துபிழைகளுக்காக திட்டுவதாக இருந்தால் தனிமடலில் வரவும் :)

1 comment:

  1. தொடருங்கள்.. இன்னும் அறிய காத்திருக்கிறேன்...

    ReplyDelete