Thursday, August 16, 2012

VGP 2

சுதந்திரதினத்தன்று படங்கள் எடுக்க மெரினாவில் இருந்து காரைக்கால் வரை ஒவ்வோரு இடமாக திட்டமிட்டு எல்லாம் சொதப்பி கிழக்கு கடற்கரை சாலைக்கு போவது என முடிவெடுத்தோம், ஒரு வண்டியில் உமாநாத் அண்ணன், வித்யா அண்ணி, குழலி, ஒரு வண்டியிலும். அருண், ஹோமா, ஜெய் ஒரு வண்டியிலும். நான், ஒம்ஸ்ரீ ஒரு வண்டியிலும் சென்றோம். சிலரை பார்கக திட்டம் இருந்தாலும், முழு நாளும் சுதந்திரமாக சுற்ற வேண்டும் என்பதே பெரிய திட்டமாக இருந்தது.

காலையில் 7 மணிக்கே சின்னமலை நிறுத்ததிற்க்கு வந்து காத்திருந்தோம், ஒவ்வொருவராக வர கிழக்கு கடற்கரை சாலை நோக்கி பயணித்தோம், கொட்டிவாக்கம் அருகில் காலை சிற்றுண்டிக்காக நிறுத்தினோம் சிறு கடையில், இட்லி, வடை, டீ என அருமையான காலை உணவை முடித்து திரும்பவும் கிளம்பினோம்.

விஜிபி வந்ததும்  வண்டியை  நிறுத்தி விஜிபிக்கு போகலாமா வேண்டாமா என்ற ஒரு சிறு விவாதத்திற்க்கு பின் விஜிபி செல்ல முடிவெடுத்தோம்.

எல்லா பார்மாலிட்டிஸ்களும் முடித்து உள்ளே வந்த பின் 6 பெரியவர்கள், 2 சிறிவர்களாக இருந்த நாங்கள் முதல்நிலையில் இருந்த பூங்காவை தாண்டுவதற்க்குள் நீர்விழ்ச்சி, ராட்டினங்கள், சீசா, கல்தூண், பொம்மைகளுடன் விளையாட ஆரம்பித்து நாங்களும் சிறியவர்களாக மாறிப்போனோம்.

தேசிய கொடிஏற்றுவதற்க்காக இருந்த கொடி கம்பத்திற்க்கு மரியாதை செய்து அடுத்த கட்ட இடத்திற்க்கு சென்றோம், வெட்டவெளியில் வரிசையாக இருந்த கல் தூண்களில் இருந்த சிலைகள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன, 20-30 அடி உயரமுள்ள கல் தூண்களில் குதிரைகள் ஒவ்வொன்றும் ஆகாயத்தை நோக்கி பாய்வது போல் அமைத்திருந்தன, கல்தூண்களை சுற்றிலும் சிற்சிறு சிலைகள் வேறு இருந்தன.

இந்த இடங்களை கடந்து  சென்றதும் இடப்புறம் புற்களின் நடுவே ஒரு அரை வட்டத்தில் 6 அடி ஒரு தூண்களும் அதை இணைக்க அரை வட்ட வடிவில் வளைவும் அமைத்திருந்தனர், அதன் அருகே நான்கு வீணைகளை ஒரு திறந்த மண்டபத்தில் சாற்றி வைத்திருந்தனர், மண்டபத்தில் மண் சிலைகளும் அதன் பின்னால் நடராஜர் சிலைகளும் அமைந்திருந்தன, மேலும் இந்த புல்வெளியை சுற்றி நிறைய சிலைகள் இருந்தன,

மேற்குறிய இடங்களை சினிமா படங்களில் பார்த்த நியாபகம். (அழகன் படத்தில் பானுபிரியா நடனம் ஆடுவதற்க்கு பின்புறம் இந்த இடங்கள் இருக்கும்)

அதே வரிசையில் எதிர்புறம் வரிசையாக இருந்த கடை போன்ற அமைப்பில் பலூன் சுடுதல், வளையம், மீன் பிடித்தல், வாலிபால், போன்றவைகளை விளையாட வைத்திருந்தனர், இந்த விளையாட்டில் 5 சந்தர்ப்பம் கிடைக்கும் இதில் குறைந்தது 3 முறை சரியான இலக்கை அடைந்தால் ஆறுதல் பரிசு கிடைக்கும், ஒம்ஸ்ரீ 3 கேம்களில் இரண்டு  கீசெயின் வென்று வந்தான்.

சரியாக 11 மணியளவில் வாட்டர் கேம் விளையாட சென்றோம், இவர்கள் தரும் உடுப்பையே நாம் உடுத்த வேண்டும், ஆளை பார்த்து கண்களாலேயே அளவெடுத்து சரியான உடைகளை தேர்ந்து எடுத்து தந்தார்கள், உடை மாற்றிவிட்டு விளையாட சென்றோம், ஒரு பெரிய நீர் தேக்கத்தில் செயற்கை முறையில் கடல், அருவி போன்று செய்திருந்தனர், அதன் அருகிலேயே வாட்டர் ஸ்கேட்டிங், நீரோடை இருந்தது ஒவ்வொரு விளையாட்டாக முடித்து நீரோடைக்கு வந்தோம் 1 மணி நேரத்திற்க்கு மேல் இந்த நீரோடையிலேயே சுற்றி வந்து கழித்தோம், செயற்கை மழை பெய்யும் இடத்தில் உடன் வந்த ஹேமா மேடம் டான்ஸர் ஆதாலால் எங்களுக்கு நடனம் ஆட சொல்லி தந்தார், மீண்டும் நீரோட்டத்தில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்தோம்.

பசி என்ற உணர்வு இல்லை எனில் மேலும் அங்கேயே பொழுதை போக்கி இருப்போம், உடை மாற்றிவிட்டு அங்கிருந்து சாப்பிட சென்றோம், ஆளுக்கொரு பிரியாணியை சாப்பிட்டுவிட்டு ராட்டினம் விளையாட சென்றோம்.

முதல்ராட்டினம் சுற்றி வந்ததும் ப்ளைட் ஏற சென்று விட்டனர் எனக்கு விருப்பம் இல்லாததால் அருகில் இருந்த புற்செடிகளின் ஊடே சென்று கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சியின் மீது கவனம் சென்றது, வண்ணத்துபூச்சியின் பின்னால் சுற்ற ஆரம்பித்தேன், உமாநாத அண்ணனும் என்னுடன் சேர்ந்து கொண்டார், சிலபல கிளிக்கிற்க்கு பின்னர் அவர் சென்றதும் இது வரை இவர்களுடன் சேர்ந்து சுற்றிய நான் இப்பொது தனியாக ஒவ்வொரு புதர், செடி, கொடிகள், பூக்களை எடுக்க சென்று விட்டேன், இது வரை என் நந்தினியின் கண்ணில் தட்டுப்படாத தவளையும், ரயில்பூச்சியும், காளான்களும் இந்த முறை சிக்கியது. மாலை எல்லோரும் திரும்பும் போது தான் அவர்களுடன் இணைந்தேன்.

உடன் வந்தவர்கள் கோபத்தில் இருந்தனர், அடுத்தமுறை கூட்டி அழைத்து செல்ல மாட்டேன் என்று சொல்லி விட்டனர் :))
மேலும் சாபம் இட்டுள்ளனர் சிக்கிரம் கல்யாணம் ஆகவேண்டுமென :)

விஜிபி அழகும் புதுமையும் கலந்த நல்லதொரு பொழுதுபோக்கு இடமாக இருக்கிறது, பராமரிப்பு கொஞ்சம் அவசியம், நடைபாதை ஒரம் மரங்கள் அதிகம் வளர்க்கலாம் வெயிலின் ஊடே பயணிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. சில ராட்டினங்கள் பயணிக்க ஏதுவாக இல்லை, முன் சீட் இருக்கை இடிக்கின்றது அவ்வளவு நெருக்கம், ராட்டினத்தில் பயணிக்கும் போது தலைசுற்றி வாந்தி மற்றும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்ய ஏற்பாடு செய்து இருப்பதாக தெரியவில்லை, பணம் தந்தும் குடிக்க தண்ணீர் தர மறுத்த சில கடைகளும் இருந்தன, ஏதேதோ காரணம் சொன்னர்.

விஜிபி என் போட்டோகிராபி கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்னை அடுத்த இடத்திற்க்கு கூட்டி சென்றதாக உணர்ந்தேன். சுதந்திர தினத்தில் சுதந்திரமாக சுற்றி திரிந்தவைகளை நந்தினியினால் சிறைபடுத்தியது வருத்தம் அளிப்பினும் அந்நாள் எனக்கு நல்ல நாளாக அமைந்தது.

விஜிபி டிக்கெட் நிலவரம்
பெரியவர் : 200ரூபாய் + வாட்டர்கேம் = 115ரூபாய்
சிறியவர் : 90 -130 ரூபாய்
வாட்டர்கேம் டிக்கெட் உள்ளே சென்று எடுத்தால் 150 ரூபாய்.
சாப்பாடு கோம்போ : 120-160 ரூபாய்.
காமிரா கொண்டு செல்ல : 10 ரூபாய்

காலையில் சாப்பிட்ட இட்லி, சாம்பாரில் இருந்து இரவு கிளம்பும் போது வந்தியத்தேவனை உதைத்த போது சிரித்த குழலியின் சிரிப்பு வரை பசுமையான நினைவை தந்தது.

அடுத்த  பயணத்தில் மீண்டும் சந்திப்போம்.



1 comment:

  1. மிக்க நன்றி. முழுவிபரங்களுக்கும் எனக்கு உதவியது. பயணத் திட்டம் மனதில் உண்டு.

    ReplyDelete