Sunday, July 1, 2012

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : மாங்குளம்




இந்த பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் எப்படி எனக்கு இதில் ஆர்வம் வந்தது என கடந்த காலத்தை திருப்பி பார்க்க வேண்டி வந்தது. சில பழக்க வழக்கங்களையும், வேகத்தையும், நிதானத்தையும், ஒருங்கிணைக்கும் பாங்கும் என்னுள் பலஇடங்களில் எனக்கு தெரியாமலே தன் இருப்பை பதித்த என் ஆசான்/நாயகன். என் வாழ்வுடன் கலந்துப்போன அவரைப் பற்றி இப்போது எழுதக் காரணமில்லை. இருந்தும் இந்த என் ஆர்வத்திற்க்கும் / பயணத்திற்க்கும் காரணமானவர் என் தாத்தா. பள்ளி இறுதி நாட்களில் திசை தெரியாமல் சுற்றி கொண்டிருந்த வேளையில்  புத்தகங்கள் படிக்க வைப்பார் சிறுவர்மலர், காமிக்ஸ், என ஆரம்பித்து வார இதழ்களில் வரும் தொடர்களை சேகரித்து வைத்தும் அதில் வரும் படங்களை வரைந்து பார்க்க சொல்வார். இதில் ஆர்வம் வந்து புத்தகங்களை தேடிக் கொண்டிருந்த வேளையில்  பொன்னியின் செல்வனை அறிமுகபடுத்தினான் நண்பன் பால சுப்பிரமணியன். சுருக்கமாக பாலு.

பொன்னியின் செல்வன் தந்த வாசிப்பின் அனுபவம், வேறு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்தியது, இதை பற்றி நானும் பாலும் நிறைய பேசி விவாத்துள்ளோம், அவனது ஆசை, ரிலேட்டிவிட்டி தீங்கிங் வரலாற்றின் மீது எனது ஆர்வத்துக்கு காரணமானவன், கோலம் இணையத்துக்கு தூண்டுகோலும் அவன் தான்,

உதயம்.இன் வேலைகளில் இறங்கி இருந்த போது பழமையான எழுத்துக்களை கணிணியின் எழுத்துருக்காளாக செய்யலாம் என நண்பர் செல்வமுரளி மற்றும் மின்தமிழ் கூகுள் இணைய குழுமம்  மூலம் வினோத்ராஜன் அறிமுகம் ஆனார்.

வினோத்ராஜன் பிராமி எழுத்துக்களை எழுத்துருக்களாக (பாண்ட்) மாற்றும் முயற்சியில் இறங்கி இருந்தார், தொழில்முறை டிசைனாரான நான், இந்த வேலைக்கு என்னாலும் சில உதவிகள் செய்ய முடியுமாதலால் இருவரும் இணைந்தோம், வினோத் தமிழின் பழமையான எழுத்துகளை அறிமுகப்படுத்தினார். ஆரம்பகட்ட வேலைகளில் இறங்கினோம், பிராமி எழுத்துருக்களை கணிணியில் ஒரு வடிவத்துக்கு கொண்டு வருவதற்க்கு மிகவும் சிரமப்பட்டோம், உயரம், அகலம் வேறுபாடுகள் வேறு,  முதல் முறையாக எழுத்துருக்கள் செய்வதால் அடிப்படை விஷயங்களுக்கு மிகவும் சிரம பட வேண்டி இருந்தது. எங்களுக்கான மேற்கொள் நூலாக ஜராவதம் மகாதேவன் எழுதிய    Early Tamil Epigraphy  என்ற புத்தகம் கிடைத்தது, புத்தகம் ரொம்ப உதவியாக இருந்தது எழுத்துக்கள் ஒரு வடிவத்துக்கு வந்து எழுத்துருக்களை உருவாக்கி ”ஆதிநாதன்” என்ற பெயரில் வெளிட்டோம்.

அந்த புத்தகத்தில் பிராமி எழுத்துக்கள் பற்றி நிறைய இருந்தன. மேலும் சில புத்தகங்களும் கிடைத்தன, புத்தகங்களில் கல்வெட்டுகளை படி எடுத்து போட்டோ காப்பியாக இருந்தன, மதுரையின் அருகிலேயே நாகமலை புதுக்கோட்டை, ஒத்தகடை யானைமலை, மாங்குளம், கிடாரிபட்டி, திருப்பரங்குன்றம் போன்ற மலைகள், குன்றுகள் இருக்கும் இடங்களில் கல்வெட்டுகள் இடங்கள் பற்றி படித்தவுடன் கண்டிப்பாக இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன், (இந்த இடங்கள் முன்னமே பரிச்சயம் என்றாலும் கல்வெட்டுகளையும், குகையையும் காண சென்றதில்லை.)

கடந்த வாரம் மதுரை செல்ல வேண்டி வந்தது, ஞாயிறு அன்று நண்பர் பாலுவுடன், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில் வரை செல்ல தான் திட்டமிட்டு கிளம்பினோம், ஒத்தகடை வந்த பின்னர் மாங்குளம் பற்றிய நியாபகம் வந்தது, மாங்குளம் கல்வெட்டுகளை பாலுக்கு கூறி அங்கேயே போய்வரலாம் என்று இடம் விசாரித்து செல்ல ஆரம்பித்தோம். கிராமங்கள் வழியாகவே செல்ல முடிவு செய்து, கொடிக்குளம் வழியாக கிராமத்தின் உள்செல்ல ஆரம்பித்தோம்.

கிராமத்தின் முகப்பே எல்லை சாமி / காவல் தெய்வம் வரவேற்ப்பு. சுடலை மாடன், பெரியண்ணன், கருப்பசாமி, மதுரை வீரன், அய்யனார், இசக்கி அம்மன், முனீஸ்வரர்,  பாண்டி, இவர்களில் யாரேனும் இருக்கலாம், வழியெங்கும் காவல் காக்கும் பனை/தென்னை மரங்கள், கிராமம் நகரத்தின் சுவடே இல்லாமல் பின்னர் ப்ளாட்டுகளக மாற இருக்கும் விவசாய நிலங்கள் ஆடு, மாடுகள், ஓட்டிச் செல்லும் கோவண மனிதர்கள், காளைகளை விரட்டும் காளைகள், நெல்வயல்கள், களையெடுக்கும் கிழகுமரிகள், பனை மரங்கள், தென்னந் தோப்புகள், கிணற்றடி, குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், சிறு பாலங்கள், திண்னைகள், குதிரை ஒட்டும் கருப்ப சாமி, மாரியம்மன், காளியம்மன் கோவில், மண் வீடுகள், மாட்டு வண்டிகள், வெட்டவெளியில் முடிதிருத்தும் நாவிதர், அடுத்தது நான் என ஒரு சிறு கூட்டம், ரசம் போன கண்ணாடி, ட்ராக்டர்கள், பம்பரம், கண்ணாமூச்சி, தென்னம் மட்டை கிரிக்கெட், நாங்கள் இன்னும் கிராமம் என்பதை உறுதி செய்தன, அருமையான சூழல், பயணத்திற்க்கு வானிலை மந்தமாக இருந்தது இன்னும் வசதியாக இருந்தது.  ஒவ்வொரு கிராமாக கடந்து விசாரித்து மாங்குளம் சென்றோம்.


மதுரை - மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள கத்தப்பட்டிப் பிரிவில் பயணித்தால் பூசாரிபட்டியை அடுத்தாக வலப்புறம்  திரும்பி சென்றால் மாங்குளம் அடையலாம், பின் அங்கிருந்து வலப்புறம் சாலையில் திரும்பி அந்த சாலையிலேயே பயணித்தால் தெற்கு வடக்காக அமைந்துள்ள கழுகுமலைச் சரிவில் முடிகிறது. இங்குள்ள மலையை கழுகுமலை அல்லது ஒவாமலை என அழைக்கிறார்கள்.


முதலில் வரவேற்ப்பு தொல்லியல் துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டு

இதை கடந்து மேலே செல்லுவதற்க்கு மலையில் படிக்கட்டு மற்றும் கைப்பிடியும் அமைத்திருந்தனர். கொஞ்சம் மேலே வந்ததும் வலப்புறம் மேலே செல்ல வசதியாக பாறைகள் அமைந்திருந்தன. ஒரு பாறையை சுற்றி இடப்புறம் திரும்பி மேலே வந்தால் மலையின் உச்சி சமதளமாக இருந்தது. அங்காங்கே கொட்டிவைத்தது போன்ற பாறைகள் சிதறிகிடக்கிறது. மலையை சுற்றியும் மலைகள் தான். இந்த மலையினை சுற்றி நீளமான நெடுக தொடர்ந்துருக்கும் மலைத்தொடரும் காடாய் வளர்ந்திருக்கும் மரக்கூட்டங்களும் அவற்றின் இடையில் தெரியும் ஒற்றையடிப் பாதைகளும் நீர் நிறைந்த குளங்கள், ஏரிகள், கால்வாயகள், பச்சைப் பசேல் எனக் கதிர் வளர்த்திருக்கும் வயல்களும் அருமையான இடமாக இருந்தது. மதுரையின் அருகே இப்படி ஒரு இடம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. 

360 டிகிரி கோணத்தில் பனோரமா


மலையில் அங்காங்கே அம்புகுறியிட்டு வழி காமித்திருந்தனர், காட்டுச்செடியின் ஊடே வழி ஏற்படுத்தி கடந்து சென்றோம். மலையின் உயரமான பகுதியில் பெரிய அளவில் அமைந்துள்ள முதல் குகைத்தளத்தில் பல படுக்கைகள் உள்ளன. 60 பேர் படிக்கும் அளவிளான பரந்த சமணப்பள்ளி, சமணப்பள்ளியுடன் அமைந்துள்ள சமணக்குகை, இயற்கையாய் அமைந்த ஐந்து குகைத்தளங்கள் உள்ளன. பாறையில் விளிம்பில் ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ள பிராமி கல்வெட்டுக்கள் காணப்படுகிறது.  இக்கல்வெட்டுக்கள் மீனாட்சிபுரம் மாங்குளம் கல்வெட்டுகள் என அழைக்கப்படுகின்றன. கி.மு.3ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் என கூறப்படுகிறது. தமிழகத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகப்பழமையானதும் கூட.  



கல்வெட்டை பற்றி சேசாத்திரி அய்யா மின் தமிழ் குழுமத்தில் பகிர்ந்தது.
-------------------
கல்வெட்டு 1:1

மாங்குளம் மலை மீதினில் சென்றதும் உள்ள முதல் குகைத் தளத்தில் இரு கலவெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.அவை பாறை முகப்பில் அமைந்த நீர்வடி விளிம்பின் கீழ் உள்ளன. முதற்கல்வெட்டு ஒரே வரியில் உள்ளது.


கணிய் நந்த அஸிரிய்ஈ குவ் அன்கே தம்மம்
இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன்
வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

கணிநந்த ஸிரிய்குவ்அன் என்பவனுக்கு தருமமாய் நெடுஞ்செழியன் அலுவலனான கடலன் வழுதி என்பான் இப்பள்ளியைஉருவாக்கித் தந்தனன் என்பது இதன் பொருள். பணஅன் என்பதற்கு அரசனின் அலுவலன் எனபது பொருள்.
இக்கல்வெட்டுப் பொறிப்பில் ஏராளமான எழுத்துப் பிழைகள் உள்ளன. அத்துடன் அன் ஆண்பால் ஒருமை ஈறு பணவன், கடலன் என தனியே பிரித்து காட்டப்பட்டுள்ளது. சிந்து முத்திரைகளிலும் அன் ஈறு தனிப்பட காட்டப்பட்டு உள்ளது.

கல்வெட்டு 1:2

முதற் கல்வெட்டு உள்ள இடத்திலேயே இக்கலவெட்டு உள்ளது.

கணிய் நத்திய் கொடிய்அவன்
டகர மெய் சேர்த்து கொட்டியவன் என படிக்க வேண்டும். மேற் சொன்ன கல்வெட்டை  கணி நந்தி கொட்டினான் என்பது பொருள்.

கலவெட்டு 1:3

முன் இரண்டு கல்வெட்டுகளின் குகைக்கு வடக்கே கீழ்ப்புறம் உள்ள  குகையின் வெளிப்பாறைச் சுவரில் வரே வரியில்பொறிக்கப்பட்டுள்ளது.

கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடுஞ்சழியன்
ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய் பளிய்

கணி நந்தஸிரியனுக்கு தர்ம்மாக் பள்ளி  அமைத்துக் கொடுத்தவன் நெடுஞ்சழியனின் சகலையாகிய இளஞ்சடிகனின் தந்தை சடிகன் என்பது இதன் பொருள். சடிகன் சேய் என்பது போல் சேய் சிந்து முத்திரைகளிலும்  காணப்படுகின்றது..

கல்வெட்டு 1:4

மேற்கண்ட குகைத்தளத்தின் மேல் மற்றொரு குகைத்தளத்தில் நீண்ட ஒரு வரிக் கல்வெடடு இது.

கணிஇ நதஸிரிய் குவ(ன்) -- -- வெள்அறைய் நிகமது காவதிஇய்
காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்
வெள்ளறை நிகமத்துக் காவிதியான கழிதிகன் அந்தையின் மகன்அஸிதன் என்பவன் கணி நந்தஸிரிக்குவனுக்கு அமைத்துக் கொடுத்த உறைவிடம் என பொருள்.  ககர மெய்  மெய் ர்த்து கழிதிக்க என படிக்கவேண்டும்

---------------
அங்கிருந்து ஒவ்வொரு பாறையாக சுற்றி வந்தோம், ஒவ்வொரு பாறையில் அடியிலும் ஒரளவு இட வசதி இருந்தது.



ஆகழ்வராய்ச்சிக்காக தோண்டபட்ட குழி

இன்னும் தோண்டப்பட வேண்டிய இடங்களை தேடி நானும் பயணிக்க இருக்கிறேன்.
------------------------

நம் முன்னோர்க்ள் இந்தக் கருங்கல்லை அழகான குடைவரைக் கோயில்களில் தொடங்கி, சிற்பங்களையும், ஓவியங்களையும் மலைகளில் செதுக்கி கல்லிலே கலைவண்ணம் கண்டனர். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழினமான நாம் நமது பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் அமைந்திருக்கும் கோயில்களையும், மலைகளையும் சுயலாபத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் பண்பாடு சார்ந்த, மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள், நெடிய வரலாற்றுச்சான்றுகள் இருந்தபோதும், சுயநலத்திற்க்காக சிதைத்ததன் காரணமாகவும் எண்ணற்றவற்றை இழந்துவிட்டோம். நமது வரலாற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரவில்லை. நமது பண்பாட்டின் தொன்மையை எடுத்து சொல்லி  வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதன் இன்றியமையாமையை அடுத்த தலைமுறைக்கு சொல்ல தவறி விட்டோம். இன்று அண்ணாந்து பார்த்து வியந்த மலைகள் நாளை தார் சாலைகளுக்கு ஜல்லிகளாக மாறும் காலம் வெகுதொலையில் இல்லை.

பயணங்கள் தொடரும்....


3 comments:

  1. இனிய நண்பர்களே, திரு உதய சங்கரின் இந்த பதிவை படித்துப் பாருங்கள். நான் மிகவும் மகிழ்கிறேன். நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. the recent scam on golden granite quarrying has it affected these cultural heritage..

      Delete
  2. பூதபாண்டியனின் படை தளபதியாக இருந்து பூதபாண்டியனின் மறைவிற்கு பிறகு ஆசிவக மதத்தை தழுவிய துறவி கணி நந்தாசிரியன் இயக்கனுக்கு பூதபாண்டியனின் மகன் நெடுஞ்செழியன் அமைத்துக் கொடுத்த கற்படுக்கை. சமண மதம் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே தமிழர் சமயமாக இருந்தது ஆசிவகம். (ஆசிவகமும் அய்யனார் வரலாறு, விடியலை நோக்கி களப்பிரர் வரலாறு புத்தகங்களை படித்து பாருங்கள்)

    ReplyDelete