Monday, March 5, 2012

என் தோழர்கள்


முன் குறிப்பு : நான் வசிப்பது தீப்பெட்டி சைஸ் இருக்கும் இடத்தில் 6 வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார், வீட்டின் சொந்த காரர் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர். வெளிச்சம், காற்று வீட்டிற்க்குள் வர மின்சாரத்தின் உதவி தேவையாக இருக்கும்படியான வீட்டிற்க்கு மாதம் 5000/- குறைந்தது கரந்துவிடுவார் மின்சாரம், பராமரிப்புகள் அடக்கம், வாடகை வாங்குவதற்க்கு தவிர வேறு எப்போதும் எங்களை எட்டி பார்க்காதவர். வசதிகள் குறைவாக இருப்பினும் மனதிற்க்கு நிறைவான என் அறை தோழர்களை விட்டு பிரிய மனமில்லை. என் தோழர்கள் பால்யகால நினைவுகளையும், என் தனிமையை போக்குபவர்களாகவும், செல்ல சண்டைகளையும், அன்பையும், தரும் நல்ல நண்பனாக, தன்னம்பிக்கை பாடம் எடுக்கும் குருவாகவும் இருக்கும் இவர்களை பிரியமனமில்லை.

அறை தோழர்களின் அறிமுகம்
அறையில் 2 பேர் தங்கி இருக்கிறோம், நிறைய நண்பர்கள் வருவர் சிலர் நிரந்தரமாகவே எங்களுக்கு தெரிந்தும் தெரியாமாலும் தங்கி இருக்கின்றனர். இந்த வீட்டிற்க்கு வந்த புதிதில் நிறைய கை கலப்பு நடந்து உள்ளது எங்களுக்குள், நிறைய ரத்தம் பார்த்துவிட்டோம், ஒரு முறை மீசை காரருடன் நடந்த சண்டையில் 20 லிட்டர் தண்ணீர் கேன் விழுந்து உடைந்து விட்டது சத்தம் கேட்டு நிறைய மீசை காரர்கள் வந்து என்னை சூழ்ந்து விட்டனர், எல்லோரையும் உள்ளே வைத்து கதவை மூடி வைத்துவிட்டு நண்பர் அறைக்கு அபயம் தேடி சென்றேன், இரவில் உறங்கும் போது என் தலை அருகில் சிறு அசைவு திரும்பி பார்த்தால் அதே போல் மீசை, எங்கே போனாலும் நம்மை விரட்டி கொண்டிருக்கும் இந்த மீசைகாரர்களுக்கு பயந்து ஒளிவதை விட எனது அறையிலேயே எதிர்த்து நிற்ப்பது என முடிவு செய்து மீசைகாரர்களை எல்லாம் ஹிட் செய்தேன், அதன் பயன் தற்போது நான் முழித்திருக்கும் போது வருவதில்லை.

மீசைக்கரரை பார்த்தாலே எனக்கு பயம் என்றால், இவர் என்னை பார்த்தாலே பயந்து ஒடுவார், அரும்பு மீசைக்கு சொந்தக்காரர், நமக்கும் ஒரு அடிமை இருக்கிறான் என்று மமதையில் இருந்தால் சத்தம் இல்லமால் என் முக்கியமான தஸ்தாவேஜ்கள், மின் இணைப்புகள், கணினி விசைப்பலகைகளின் இணைப்புகளை தூண்டித்து விடுவார், எவ்வளவு பத்திரமாக வைத்திருந்தும் இவர் வீட்டிற்க்கு வர முடியாத அளவிற்க்கு செய்தும் பயனில்லாமல் போய்விட்டது. கோபத்தில் அவரை கொல்ல சாப்பாட்டில் விஷம் வைத்தும் பார்த்தாயிற்று சாப்பிட்டு ஒரு சுற்று கூடுதலாக இருக்கிறார், அவர் முறைக்கும் போது அழகாக இருக்கும் அவரை படம் எடுக்க முயற்சித்து சுவற்றில் நாலுமுறை மோதியதுண்டு. இவர் இருந்த போதும் ஆயிரம் கேடுதல்களையும், இறந்த போதும் ஆயிரம் துர்நாற்றங்களையும் உண்டாக்கி சென்றவர். இறந்த அவரின் இடத்தை நிரப்ப வேறு ஒருவர் வந்துவிட்டார்.

பெயருக்கு ஏற்றார் போல் சின்னவர்/ள் மிகவும் சூட்டிகையானவர்கள், நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்றால் இவர் முகவரி தருகிறேன், மன்னிக்கவும் இவர்களுக்கு முகவரியே தேவை இல்லை கதவை திறந்தால் போதும், எங்கும் எப்போதும் எங்கும் நிறைந்தவர்கள், ஒரு முறை இவர் வந்து கையை கடித்தார் தட்டிவிட்டேன், ஊரேயே கூட்டி வந்து கடிக்க வைத்து விட்டார் இப்ப என்ன செய்வாய் என்று காதிற்க்குள் வந்து கத்தி விட்டு போனார், ஒட்டை போட்டு ஜூஸ் குடிக்கும் அழகை பார்த்தால் நமக்கு சூறீற் என்றிருக்கும், எத்தனையோ முறை அவரை அடிக்க முயற்சித்து என்னையோ அடித்து கொண்டிருக்கிறென், இவர்கள் ஜூஸ் குடிக்கும் விதத்தை தான் இன்று மருத்துவர்கள் வேறு பெயரில் நம்மீது உபயோகிக்கிறார்கள், இவர்களுக்கு ஆதாய உரிமை தருகிறார்களா என்று தெரியவில்லை, வீட்டிற்க்குள் இயற்கை காற்று வேண்டும் என்றால் இவரும் வருவார் என்பது உலக நியதி.

வெளிச்சத்தின் பக்கமே இருப்பார், அவர் நாக்கை நீட்டி சுழற்றி சாப்பிடும் அழகோ அழகு, தனிமையில் இருக்கும் போது அதிகம் இவரை பார்த்து கொண்டெ இருப்பேன், இவர்களின் அசைவுகள், வேகம், அபாரம். ஒரு முறை பல்டி அடித்து என் காலின் இடையில் ஒடிய பொழுது என் இருதயம் பன்மடங்கு அதிகமாக துடித்தது மறக்கமுடியாத நினைவு, இவர்களின் பழைய பங்காளி உறவை சார்ந்தவர்களை படம் எடுக்க மிகவும் விருப்பம், அவர்களை படம் எடுத்த பின் தான் என் நந்தினியால் நான் நிறைய உதார்கள் விட்டு கொண்டிருக்கிறேன். அதனால் வந்த ஈர்ப்போ என்னவோ அவர் விட்டிற்க்குள் இருக்கும் போது நான் அதிகம் கண்டு கொள்வதில்லை. இவருக்கு சாஸ்திரம்லாம் உண்டு, உடம்பில் எங்கு விழுந்தாலும் பலன் இருக்கும் சாப்பாட்டில் விழுந்தால் பலன் இல்லை, பரலோகம் போக பலன் எதற்க்கு.

என் ஜன்னல் விளிம்பில் இருக்கும் காம்பவுண்ட் சுவரின் மேல் இருக்கும் பூந்தொட்டிக்கு அருகாமையில் இருப்பவர், மழை பெய்தால் மட்டுமே அதிகம் எட்டி பார்ப்பார், இவர் நடந்து பார்த்தது இல்லை உட்கார்வார் தவ்வுவார், கடந்த மழை காலங்களில் 3 மாதமாக இவரை படம் எடுக்க நந்தினியிடன் நான் பட்ட பாட்டை ”படத்தை சொதப்புவது எப்படி” என்று ஒரு படமாக எடுக்கலாம், இரவில் தூரத்து தெருவிளக்கின் அரைகுறை வெளிச்சத்தின் பிரதிபலிப்பில் 1 அடி தூரத்தில் இருக்கும் இவரின் தற்சமய குடியிருப்பில் ஜன்னலின் ஒரமாக நின்று இவரை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு, தினம் இரவு தூங்க செல்லும் முன் பார்த்துவிட்டு சென்ற எனக்கு சில தினங்கள் அவர்/ள் வராதது எனக்கு மனக்கஷ்டமாக இருந்தது, அறை தோழன், மற்ற நண்பர்களிடம் காதல் வயப்பட்டுள்ளான் பின் வீட்டு ஜன்னலில், என கிண்டலுக்கு இறையாகி இருக்கிறேன், இரவு 2 மணிக்கு கைவிளக்கு வெளிச்சத்தில் பார்த்து கொண்டிருந்த போது பக்கத்துவிட்டின் கிசுகிசு குரலில் என்னை திட்டும் சத்தம் கேட்டு ஜன்னலை முடியவன் திறக்க மனம் இல்லை, மானம் போக மனம் இல்லை
(இவரையும் விடியோ எடுத்து வைத்துள்ளேன் தட்டான் இரண்டாம் பாகம் முடிந்ததும் இவரை பற்றி பகிர்ந்துகிறேன்.)

ரொம்ப முக்கியமானவர் நன்றியின் உவமைக்கு சொந்தகாரர், ரொம்ப சிறுவனாக இருந்தே எங்களுடன் இருப்பவர், உள் வாசலில் வலக்கோடி மூலையில் 3அடி நீள அகலத்தில் பாதகை வைப்பதற்க்காக கட்டிய இடத்தில் குடியிருப்பவர், வாசலை தாண்டி உள்ளே வந்தது இல்லை, அவசரமாக கிளம்புகின்ற வேலையில் நிறைய முறை உதை வாங்கியவர், அதற்க்கு ஒரு முறை கூட சிறு முறைப்பு கூட அல்லாமல் ஒடிவிடுவார், தினம் ரொட்டி துண்டு தருவதால் இருக்குமோ என தெரியவில்லை. இவரின் நட்பு இருப்பதால் தான் என்னவோ தெருவில் எவரும் என்னிடம் வாலாட்டுவதில்லை, கடந்த மார்கழியின் பொது இரவு தூங்குவதற்க்கு வரவே இல்லை, தற்போது நடையில் கம்பீரம் இருக்கிறது, தெருவில் நானும் ரவுடி தான் என்று இருமாப்பில் இருக்கின்றார், இரவு நடுஜாமத்தில் தெருவலம் போய் திரும்ப வரும்போது வெளிப்புற கதவை பூட்டிவிட்டால் வாசலில் நின்று சத்தமாக தட்டிக்கொண்டே இருப்பார். திறக்கவில்லை என்றால் அவர்கள் நண்பர்களையும், பக்கத்து விட்டில் உள்ளவர்களை எழுப்பி வாசலில் இவருக்காக குரல் கொடுக்க வைப்பார்.

வந்தியத்தேவனை தெரு வீதியில் முருங்கை மரத்தின் அடியில் நிறுத்தி இருப்பேன், தினமும் அவனை குளிப்பாட்டி சுத்தமாக இருக்க காரணம் இவரின் கக்கா, முருங்கை மரத்தில் குடியிருப்பவர் கருப்புக்கு சொந்தகாரர், ஒரு கண் குருடு, முன்பொரு நாள் பக்கத்தில் தேனீர் கடையில் வடை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது என் குதி காலின் மேல் ஏதோ உரசுவது போல் தோன்றிற்று குனிந்து பார்த்தால் நம் க(கா)க்கா, தலை நிமிர்ந்து என்னிடம் எதிர்ப்பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தார், இவருக்கும் ஒரு வடை வாங்கி தந்து அருகில் குவளையில் தண்ணீரையும் ஊற்றி வைத்தேன், வடையை வாங்கி அங்கேயே சாப்பிட்டு இருந்தால் பாதகம் இல்லை, பக்கத்தில் இருந்த குட்டிசுவற்றில் போய் அமர்ந்து அவர் நண்பர்களை அழைத்தார் அவர்கள் வந்ததும் அந்த வடைக்காக நடந்த சண்டையில் தோற்று போய் திரும்ப வந்தார், அவர்க்கு இன்னொரு வடை எடுத்து தரும் போது, யாசகம் கேட்கும் மனநிலையில் இல்லாமல் குவளை தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு போய்விட்டார்.

என் தோழர்கள் வலிமையில் எளியோர் தான், அந்த எளியோர்களிடம் ஆரம்பத்தில் இருந்த வெறுப்பு, தற்பொது நட்பாகி விட்டது, சில தொந்தரவுகளை தாண்டி அவர்களை கவனித்தால் நமக்கு ஏதோ சொல்லி தந்து கொண்டே இருக்கின்றனர், நாம் தான் அதை கவனிப்பதில்லை.

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்ற வள்ளுவரும்
”சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்ற புறநானூற்றுப் புலவனின் கூற்றும் மனத்தினில் கொண்டால் பெரியவர்களை வியக்கவும் மாட்டோம் எளியோரை இகழவும் மாட்டோம். எளியோரை மதித்தல் வேற்றுமை காணும் மனப்பான்மை இல்லாமல் போகிறது. அனைவரையும் ஒன்றாக மதிக்கும் உயரிய மனப்பாங்கு தோன்றுகிறது. இந்த உயரிய மனப்பாங்கும் அனைவரிடமும் வெறுப்புணர்ச்சியின்றி, அன்பு காட்டி அரவணைக்க உதவுகிறது. அன்பை வெளிப்படுத்த இங்கே ஜடப்பொருள், உயர்திணை, அஃறிணை என பேதம் தேவை இல்லை.

நன்றி என் தோழர்களே!!!
பண்புடன் இதழுக்காக நான் எழுதியது : http://www.panbudan.com/story/en-thozarkal
-------------------------
படங்கள்

என் தோழர் பக்கத்து வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி சைட் அடிக்கும் போது எடுத்தது.

இன்னொரு தோழர் என் மானிட்டரில் ஏறி விளையாடிய போது எடுத்தது


No comments:

Post a Comment