Wednesday, June 11, 2014

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : குடியம் குகை

அந்த குன்றை அடுத்து எங்களது முக்கிய இலக்கான பெரிய குகையை நோக்கி நடந்தோம், சில இடங்களில் கூழாங்கல் பாதையாக இருந்தது கால்தடத்தை வைத்து வழி கண்டுபிடிக்க முடியாது. அங்காங்கே தென்படும் சிகரெட் அட்டை, ஸ்வீட் பாக்ஸ், ப்ளாஸ்டீக் காகிதங்கள், மூடிகள் வழிகாட்டின. அதையே தொடர்ந்து செல்லலானோம், பாதையில் இரு பக்கமும் சிறுபாறைகளை குவித்து அடுப்பு மூட்டிய தடம் தென்பட்டன, மலையை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் இதமான குளிர்ந்த காற்றில் களைப்புகளை மறந்தோம், குகையை நெருங்கியதும் இனம்புரியாத படபடப்பு. போகும் வழியே தூரத்தே மலையே U வடிவிற்க்குள் உட் செல்வது போல் இருந்தது, பாதை வளைந்தது, அந்த சிறிய வளைவில் நுழைந்து இடப்புறம் திரும்பியபோது, லட்சக்கணக்கான ஆண்டுகளை கடந்த குகை எங்கள் முன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. மூதாதையர்கள் வாழ்ந்த அந்த குகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு பரவசம்.

கண்களை மூடி ஒரு கணம் லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேகமாகப் பயணித்தேன். வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட மனிதர்கள் வாழ்ந்த குகை. மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்திருந்து குகைக்குள் அமர்ந்திருந்த அந்த கற்கால மனிதர்கள். அந்த குகையின் எளிய கம்பீரம், காடு தந்த  அந்த கனத்த மௌனமும் எங்களை சூழ்ந்துகொண்டன. எதிரில் உள்ள பாறைகளில் வெயிலின் தாக்கம் இந்த குகையில் மட்டும் குளிர்ச்சி நிறைந்திருந்தது. சுமார் 250 பேர் அமரக் கூடிய அளவிற்கு இடமிருந்தது. மூன்று புறமும் பெரும் பாறைகள் சூழ்ந்திருப்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என இதனைத் தேர்வு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. இதமான காற்றில் ஒய்வெடுக்க எண்ணி குகையில் அமரும் வேளையில் குகையின் மேலே பெரிய பெரிய தேன் கூடுகள் காற்றில் அசைந்து காவலுக்கு இருப்பதாக காட்டிக் கொண்டது, எங்கே நான் இங்கேயே இருந்துவிடுவேனோ என்று எண்ணி அவ்வப்போது என்னை பீதியூட்டின.

குகையின் உள்ளே இருந்த அம்மனை வணங்க ஒரு குடும்பம் வந்திருந்தது, அம்மன்க்கு வழிபாடுகள் நடப்பது அங்கிருக்கும் பொருட்கள் உணர்த்தியது, நேர்த்திகடனுக்காக குதிரைகள், யானைகள் செய்து வைத்திருந்தனர், லிங்க வடிவிலான கற்கள் ஒரு புறம் குவிந்து கிடந்தன, மதமேதுமில்லாத எங்களுக்கு ஏன் இத்தனை கடவுள்கள், நான் இருந்தேன் என்ற அடையாளமாக இருக்கும் எஞ்சிய என் வீட்டையாவது விட்டுவிடுங்கள் என்று மன்றாடுவது போல இருக்கும் அங்கிருந்த மண்டை அளவு உள்ள உருண்டை கற்களின் அந்த பார்வை.

U வடிவில் மலை 









குகையின் எதிரே 




No comments:

Post a Comment