Thursday, June 12, 2014

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : குடியம் குகை


பெரிய குகையில் இருந்து மலையின் மேல் குறிப்பிட்ட தூரம் சென்ற பின் பாறைகள் இடம் மற்றும் வலப்புறம் சென்றன வலப்புறம் இரு பெரும் பாறைகள் இருந்தன 20 அடி தூரத்தில் பாதை முடிவுற்றது. இடப்புறம் செல்லும் பாதையில் திரும்பி குறிப்பிட்ட தூரம் கடந்த பின் பாதைக்கான தடம் இல்லை, கையில் ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில் செடி கொடிகளை விலக்கி மேற்கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை, பாறைகள் மேல் ஏறலாம் என எண்ணி 20 அடி உயரம் உள்ள பாறை பிடித்து மேலே ஏறலானேன் கைவசம் இருந்த பிளாஸ்டிக் கயிறு கொண்டு மேலே ஏறியதும் காமிரா பைகளை தூக்கி கொண்டு மேலே சென்றால் ரத்த காயங்கள் மேல் விழுந்த வெயிலின் உக்கிரம் அப்போது தான் உரைத்தது.

மேலே இருந்து குகையை பார்த்த பின்பு வெற்றி என்று கத்த முடியாத அளவுக்கு தாகம் தொண்டையை அடைத்தது, மொபைலிலும் சிக்னல் இல்லை, நான் வந்து போனதற்க்கு அடையாளமாக ஏதும் விட்டு வரவிட்டாலும், புகைப்படங்கள் எடுத்து வந்தேன்.

படத்தின் இடப்பக்கம் குகையின் ஆரம்பத்தில் வெள்ளை வண்ணத்தில் புள்ளியாக தெரிவது உடன் வந்திருந்த நபர்கள் புள்ளியை ஒரு அளவுகோலாக வைத்து குகையின் நீளம், அகலம், உயரத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்.



இடப்பக்கம் பச்சை வண்ணத்தில் நடுவே தெரியும் கோடு நாங்கள் வந்த பாதை



பனோரமா வியூ
படத்தை பெரிய அளவில் பார்க்க Click செய்யவும்
 

Wednesday, June 11, 2014

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : குடியம் குகை


குகையை அடைந்து விட்டாலும் மனம் இதன் மேலே இருந்து பார்க்க வேண்டும் ஆவல் மேலோங்க கிளம்பினேன், யாரிடம் சொல்லிவிட்டு செல்லும் மனநிலையில் இல்லை குகையின் மறுமுனையில் தெரிந்த ஒற்றையடிப்பாதையை தொடர்ந்து செல்லலானேன் என்னை தொடர்ந்து சிலர் வர முயற்சித்தாலும் அவர்களால் தொடர முடியவில்லை,  பாதை மேடும் பள்ளாகவும் பாறைகள் விழுதுகள்  சூழ்ந்தும் சில இடங்களில் 2.5 அடி விட்டம் அளவிற்க்கு 3அடி முதல் 8 அடி நீளத்திற்க்கு புதர்களாலும் பாறைகளாலும் பைப் போல் நீண்டு இருக்கும், நான் ஆர்வத்தில் மேலேறினாலும் கைகளில் இரத்த கோடுகள் அதிகமாகி கொண்டிருந்தது இருந்தும் ஆர்வம் அதிகமாகி மேலே செல்லலானேன் மேலே செல்வதை விட கிழே இறங்குவது மேலும் அபாயகரமாக தெரிந்தது, எதுவானாலும் மேலே இருந்து படம் எடுத்தே ஆக வேண்டும் ஆர்வம் செல்லானேன்.












மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : குடியம் குகை

அந்த குன்றை அடுத்து எங்களது முக்கிய இலக்கான பெரிய குகையை நோக்கி நடந்தோம், சில இடங்களில் கூழாங்கல் பாதையாக இருந்தது கால்தடத்தை வைத்து வழி கண்டுபிடிக்க முடியாது. அங்காங்கே தென்படும் சிகரெட் அட்டை, ஸ்வீட் பாக்ஸ், ப்ளாஸ்டீக் காகிதங்கள், மூடிகள் வழிகாட்டின. அதையே தொடர்ந்து செல்லலானோம், பாதையில் இரு பக்கமும் சிறுபாறைகளை குவித்து அடுப்பு மூட்டிய தடம் தென்பட்டன, மலையை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் இதமான குளிர்ந்த காற்றில் களைப்புகளை மறந்தோம், குகையை நெருங்கியதும் இனம்புரியாத படபடப்பு. போகும் வழியே தூரத்தே மலையே U வடிவிற்க்குள் உட் செல்வது போல் இருந்தது, பாதை வளைந்தது, அந்த சிறிய வளைவில் நுழைந்து இடப்புறம் திரும்பியபோது, லட்சக்கணக்கான ஆண்டுகளை கடந்த குகை எங்கள் முன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. மூதாதையர்கள் வாழ்ந்த அந்த குகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு பரவசம்.

கண்களை மூடி ஒரு கணம் லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேகமாகப் பயணித்தேன். வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட மனிதர்கள் வாழ்ந்த குகை. மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்திருந்து குகைக்குள் அமர்ந்திருந்த அந்த கற்கால மனிதர்கள். அந்த குகையின் எளிய கம்பீரம், காடு தந்த  அந்த கனத்த மௌனமும் எங்களை சூழ்ந்துகொண்டன. எதிரில் உள்ள பாறைகளில் வெயிலின் தாக்கம் இந்த குகையில் மட்டும் குளிர்ச்சி நிறைந்திருந்தது. சுமார் 250 பேர் அமரக் கூடிய அளவிற்கு இடமிருந்தது. மூன்று புறமும் பெரும் பாறைகள் சூழ்ந்திருப்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என இதனைத் தேர்வு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. இதமான காற்றில் ஒய்வெடுக்க எண்ணி குகையில் அமரும் வேளையில் குகையின் மேலே பெரிய பெரிய தேன் கூடுகள் காற்றில் அசைந்து காவலுக்கு இருப்பதாக காட்டிக் கொண்டது, எங்கே நான் இங்கேயே இருந்துவிடுவேனோ என்று எண்ணி அவ்வப்போது என்னை பீதியூட்டின.

குகையின் உள்ளே இருந்த அம்மனை வணங்க ஒரு குடும்பம் வந்திருந்தது, அம்மன்க்கு வழிபாடுகள் நடப்பது அங்கிருக்கும் பொருட்கள் உணர்த்தியது, நேர்த்திகடனுக்காக குதிரைகள், யானைகள் செய்து வைத்திருந்தனர், லிங்க வடிவிலான கற்கள் ஒரு புறம் குவிந்து கிடந்தன, மதமேதுமில்லாத எங்களுக்கு ஏன் இத்தனை கடவுள்கள், நான் இருந்தேன் என்ற அடையாளமாக இருக்கும் எஞ்சிய என் வீட்டையாவது விட்டுவிடுங்கள் என்று மன்றாடுவது போல இருக்கும் அங்கிருந்த மண்டை அளவு உள்ள உருண்டை கற்களின் அந்த பார்வை.

U வடிவில் மலை 









குகையின் எதிரே 




மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : குடியம் குகை


குகையை நோக்கி எங்களது பயணத்தில் ஒற்றையடி பாதை காட்டுக்குள் செல்ல யாரும் முந்தி கொண்டு செல்ல இயலாது, நடக்க முடியாதவர்களையும் வேகமாக நடப்பவர்களையும் ஒன்றைணைத்து அழைத்து செல்ல வேண்டி இருந்தது, இதமான காற்று மற்றும் எங்கோ குருவிகளின் சத்தம் மட்டும் கேட்டது. உயரமான புதர்கள் நிறைந்த காடாக இருக்கிறது. பரிச்சயமான மரங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆங்காங்கே சில சப்பாத்தி கள்ளிச்செடிகள் தென்பட்டன.

பாதி கடந்த நிலையில் நான்கு புறமும் சிறிய பெரிய குன்றுகளுக்கு இடையில் நின்று கொண்டிருப்பது புலப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்திருப்போம்.

இடப்பக்கம் ஒரு குன்றின் மேல் கடலை உருண்டையில் ஒட்டி கொண்டிருக்கும் கடலை போல கற்கள் ஒட்டி கொண்டிருந்தது ஆரவத்தில் அந்த குன்றை நோக்கி ஏறினேன்.










மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : குடியம் குகை


கடந்த மாதம் ஒரு சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் ஒரு அழைப்பு, காலை குடியம் போறோம், வந்துவிடு என்று ரீச் பவுண்டேசனின் தலைவர் சத்தியமூர்த்தி அய்யா கூறினார். குடியம் குகையா எங்கேயோ கேள்வி பட்ட பெயராக இருக்கிறதே என ரீச் பவுண்டேசன் சந்திரா அய்யாக்கு அழைத்தேன், ஆம் போகிறோம் காலையில் 5.30க்கு வந்துவிடு என்றார்.

ரீச் பவுண்டேசனின் தலைவர் / தொல்லியல்துறையின் முன்னால் அதிகாரி சத்தியமூர்த்தி அய்யா மற்றும் இந்திய புவியியல் ஆய்வு துறையில் இருந்து பத்ரிநாதன் அவர்கள் தலைமையில் கல்வெட்டு மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள் என 30 பேர் கிளம்பினோம்.

சென்னைக்கு இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ல குடியம் என்ற ஊருக்கு சென்றோம், 10 வீடுகள் கொண்ட குக்கிராமத்தை அது. எல்லோரும் இறங்கி கொஞ்சம் இளைப்பாறினோம்.

அருகில் மலையே தெரியவில்லையே எங்கே இருக்கிறது குகை என அருகே இருந்தவரிடம் கேட்டேன் கையை மேலே தூக்கி வடக்கு பக்கம் பார்த்தவாறு மனிதர்கள் போன வழித்தடம் இருக்கும் அதைப் பின்பற்றி 7 கிமீ  நடக்க வேண்டியதுதான் என்றார்.

எல்லோரும் நடக்க ஆரம்பித்தோம், கூழாங்கல் பாதை எங்களை வழிநடத்தி அழைத்துச் சென்றது. மிகவும் அடர்த்தியான காடு அல்ல. ஆனால் சில இடங்களில் 6 அடி தொலைவிற்கு அப்பால் இருப்பது தெரியாத அளவு புதர்கள் மண்டிகிடந்தன.

இனி படங்களுடன் பயணிப்போம்

அந்த கிராமத்தில் வட்டவடிவத்தில் அமைக்கப்பட்ட குடிசை

 கார் போன தடம், இந்த தடத்தை தொடர்ந்து நடந்தோம்
 பின் ஒற்றையடி பாதையில்
 போகும் வழியில் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் மண் வண்ணம் மாறி இருந்தது.
 அங்கிருந்த வண்ணக் கல்