Tuesday, July 15, 2014

தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும் 2


விஜய் (Potery Stone Vijay)
 
திவாகர் அய்யா முதல் மடலிலேயே விஜயை அறிமுகம் செய்திருந்தார், அவரின் இணையம் பார்த்து இருக்கேன், சில கட்டுரைகளும் படித்திருக்கிறேன், சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவரிடம் நிறைய பேச / கேட்க வேண்டும் என்று இருந்தேன்.

--

ஒரு வார விடுமுறையில் அதிகாலையில் ரீச் பவுண்டேசன் சார்பில்  கல்வெட்டுகளை பற்றி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஸ்டடி டூர் சென்ற போது கிண்டியில் அவர்கள் வந்த வேனில் ஏறினேன், எல்லோர்க்கும் ஹாய் சொல்லிவிட்டு காலியான இருக்கையில் அமர்ந்தேன், மேலும் சிலர் ஏறினர், கடைசி சீட்டின் மறு கோடியில் ஒருவர் அமர்ந்தார், அவர்க்கும் கை கொடுத்துவிட்டு, உறங்க சென்றேன், என் கடைசி சீட்டில் இருப்பவர் வந்தவர்களிடம் பேசி கொண்டு இருந்தார், தூக்க கலக்கத்தில் இருந்த என்னை அப்போது சந்திரா அய்யா என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தார், அவர் என்ன சொல்லி கொண்டிருந்தார் என்பதை முழுதும் காதில் விழவில்லை,  என்னை எழுப்பி கடைசி சீட்டு நபர் அவர் கார்ட் தந்தார் வாங்கி பார்த்தேன் Poetry in Stone விஜய். (http://poetryinstone.in/)

இருந்த தூக்கம் கலைந்து விட்டது.

இன்ப அதிர்ச்சி, வெகு நாட்களாக பார்க்க வேண்டும் என்றிருந்த நபர், என்னை என் கலை ஆய்வு பயணங்களுக்கு தயார் செய்யவும்,, அங்கு காணும் சிற்பங்கள் குறித்த விவரங்களை உய்வதற்கும், புதிய விவரங்களை சேர்க்கும் ஆர்வம் தூண்டுவதாகவும் இவரின் இணையம் எனக்கு எவ்வளவோ உதவியாக இருந்திருக்கிறது. இருவரின் சுய அறிமுகத்துக்கு பின், என் தேடலையும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

எங்கே போறோம்னு என்று தெரியாமல் தான்  வண்டி ஏறினேன், பேச்சு சுவராஸ்யத்தில் பாதையை கூட அறியவில்லை, செய்யூர் பக்கம் குறத்திமேடு சமணமலையில் இறக்கிவிட்டார்கள். இந்த மாதம் ஏதும் மலை ஏறவில்லையே என நினைத்து கொண்டிருந்த எனக்கு தானாகவே வாய்ப்பு கிடைத்தது.

மலை ஏறும் போது ஒவ்வொரு இடமாக விளக்கி எப்படி, எவ்வாறு, எங்கனம், சிற்பங்களின் காலம், எந்த மன்னர், அதன் வரலாறு என ஒவ்வொன்ன்றையும் விளக்கினார். ஆர்வத்தில் மேலேறி கொண்டிருந்த என்னை பொறுமையாக கைபிடித்து மேலேற்றி, ஒரு நண்பனாக, சகோதரனாக, குருவாக என் சந்தேகங்கள் அனைத்திருக்கும் பொறுமையாக பதிலளித்து கொண்டிருந்தார்.

அவரின் தேடல்களைபற்றி சொன்ன போது சில விடயங்கள் மிகைப்படுத்தி சொன்னது போல் தெரிந்தது, சிற்பத்துக்கு போய் இவ்வளவு மெனகேடுவார்களா என எனக்குள் யோசித்தேன், பிரியும் வேலையில் மறுநாள் திருக்கழுக்குன்றம் செல்வதாகவும் முடிந்தால் நீயும் வா என்றார்,

மறுநாள் அதிகாலையில் குறுஞ்செய்தி அனுப்பியவுடன் உடனே நான் தயார் என பதில் வந்தது, அவசர அவசரமாக கிளம்பி அவரை சந்தித்து முதலில் மகாபலிபுரம் புலிகுகை சென்றோம் அங்கு ஒவ்வொரு சிற்பங்களை பற்றி விளக்கினார், இதன் வரலாறு, இதன் புத்தக்கம், ஆங்கிலேயேர்களின் பங்கு, நம்மக்களின் அறியாமை என ஒவ்வொன்றாக விளக்கிவிட்டு, மகாபலிபுரம் சென்று அவர் நண்பர் ஒருவரை சந்தித்து  அவர் முலம் திருக்கழுக்குன்றம் சென்றோம், கருவறை சுவற்றின் பின்னால் உள்ள சோமஸ்கந்தர் சிற்பங்களை காமித்து விளக்கினார், அவர் வெகு நாட்களாக தேடி கொண்டிருந்த சிற்பம் அது,  பார்த்ததும் அவர் முகத்தில் திருப்தி இருந்தது. இதன் பிண்ணனி, மலையின் வரலாறு, கீழே உள்ள குகையில் டச்சுகாரர்களின் வருகை பதிவேடு ஒவ்வொன்றாக விளக்கினார். வந்த நோக்கம் அந்த சிலை மட்டுமானதாக இருந்தது.

மனிதர் ஒரு சிலைக்கே இவ்வளவு கஷ்டபடுபவர் என்றால், இது வரை அவர் இணையத்தில் சேமித்திருக்கும் சேகரிப்பை நினைத்தால் அவ்வளவு பிரம்பிப்பாக இருக்கும்.

"இவரின் முயற்சி கலை ஆர்வத்தை தூண்டும் முயற்சி. இவரின் இணையத்தை வாசித்துவிட்டு அடுத்த முறை நீங்கள் அந்த இடங்களுக்கு செல்லும் பொது சில நிமிடங்கள் இந்த அறிய சிற்பங்களை ரசிக்க செலவிடுவீர்கள்."

கோவில், சிற்பங்கள் அவைகளின் பெயர்கள் உருவாக்கிய காலங்கள் அதன் வரலாறு என அவர் இணையத்தில் தொகுத்து வைத்துள்ளார், சிற்ப்பக்கலைகளுக்கான டேட்டாபேஸ் என்றால் மிகையாகது.

மேலும் அவரை பற்றி தெரிந்து கொள்ள.
http://poetryinstone.in/lang/ta/about-us-2

அவரின் இணையம்:
http://poetryinstone.in/

Monday, July 7, 2014

தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும் 1


திவாகர்
கடல்புறாவில் வரும் கப்பல்களை 3D மாடலாக செய்ய வேண்டும் என்ற ஆசையை ஒரு நிகழ்வில் உமாநாத் அண்ணனிடம் சொல்லி இருந்தேன், அவரும் மனதில் கொண்டு அச்சமயம் வெளிவந்திருந்த எஸ் எம் எஸ் எம்டன் புதினத்தில் வரும் கப்பலை குறிப்பிட்டு திவாகர் அய்யாவை அறிமுகப்படுத்தி மடல் அனுப்பினார். வரலாற்று ஆசிரியர்களுடனான நேரடி மடல் இதுவே. ஆர்வக்கோளாறன எனக்கு முதல் மடலிலேயே சரியான வழிகாட்டியும், கப்பல்கள் சம்பந்தப்பட்டவைகளையும் அதன் சார்ந்த நிபுணர்களையும் அறிமுகப்படுத்தினார். எனக்கு முகவரி தந்தவர்.

----------
தமிழில் வரலாற்றுப் புதினங்கள் என்று சொன்னால் அவை சோழர் காலத்திலும் பல்லவர் காலத்திலும் முடங்கிக் கிடந்த காலங்களில் வரலாற்று நாவல்களுக்குப் புதிய தளங்களைத் தேடியடைந்தவர்களில் திவாகர் அய்யாவும் ஒருவர்.
எஸ்.எம்.எஸ் எம்டன் என்பது  ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு போர்க் கப்பல், 1914 செப்டம்பர் 22 செவ்வாய் இரவு 9.30 மணிக்கு 'எம்டன்' சென்னைக் கடற்கரையை தனது பீரங்கிக் குண்டுகளை ஏவியது. எம்டனிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்திற்கு வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல், ஆங்கிலேயருக்குச் சொந்தமான 'பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்', சென்னை உயர்நீதி மன்றம், 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' போன்றவற்றில் 130 குண்டுகளை வீசிவிட்டு, உடனே திரும்பிவிட்டது. இந்தப் பின்வாங்கலுக்கு காரணம் ஒரு இந்தியராக இருக்கலாம் என்ற ஊகத்தை வைத்து இப்புதினம் உருவாக்கப்பட்டது.

முதலாம் உலகப் போர் நடந்த அந்த காலகட்டங்களையும்,
இரண்டு வெவ்வேறு காலத்து சரித்திரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டு, சரித்திரப் பின்னணி, பக்திப் பின்னணியுடன்,  இந்து ஆகம விதிமுறைகளும், சிவாச்சாரியார்களின் ராஜபக்தியும், படிப்பவரை ஆச்சரியத்தில் திளைக்க வைக்கின்ற வரலாற்றுத் தகவல்களுக்குரிய சான்றுகளும் குறிப்புதவிகளையும் தெளிவாக குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அந்த வரலாற்று நிகழ்வுகளை வைத்துக் கொண்டு அவர் பின்னியிருக்கின்ற நுணுக்கமான கதைக்காகவே மீண்டும் ஒரு முறை வாசிக்கலாம்.
இந்த புத்தகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள :
முதல் நாவலான ”வம்சதாரா” விசாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட 900 ஆண்டுகளுக்கு முன் வெட்டப்பட்ட இரண்டு தமிழ் கல்வெட்டுகளின் ஆதாரத்தின் மீது எழுதப்பட்ட வரலாற்று நாவல்.

வம்சதாரா, திருமலைத் திருடன், விசித்திர சித்தன், எஸ்.எம்.எஸ் எம்டன் 22-09-1914 என சரித்திர நாவல்களும், கட்டுரைகள், சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புகளில் புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.

தேவாரம், திருவாசகம் உள்ளடக்கிய திருமுறைப்பாடல்களைத் தெலுங்கு மொழியில் கொண்டுவரும் திருமலை-திருப்பதி தேவஸ்தான திட்டத்துக்குப் பொறுப்பாளராக உள்ளார்.

விஜயவாடாவில் கப்பல் போக்குவரத்து சம்பந்தமாக பணி புரிகிறார்.  எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், ஒருங்கிணப்பாளர், விசாகப்பட்டின தமிழ்மன்ற செயலாளர் பன்முக வித்தகர்.

திவாகர் அய்யாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள : http://ta.wikipedia.org/s/9vs
வலைப்பூக்கள் :
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
மின் அஞ்சல் முகவரி : venkdhivakar@gmail.com

Thursday, July 3, 2014

தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும் 0


”தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும்” இதில் வரும் ஆளுமைகளை பற்றி எழுதுவதற்க்கு முன்னால் எனக்கும் இதில் எப்படி ஆர்வம் வந்தது என்பதற்க்காக இந்த பதிவு.

ஒரு வாசகனுக்கு, வாசிக்கும் புத்தகம் என்ன மாதிரியான அனுபவத்தை தரும், அந்த புத்தகம் நம்மை என்ன செய்துவிடும்?

வாசிப்பு பொழுதுபோக்குக்காக என்று தான் ஆரம்பிக்கும். வாசிக்கும்போதே எழுத்தாளரின் எழுத்துக்களின் வழியாக ஒரு புதிய உலகத்தைப் பார்க்க முடிகிற அனுபவம் வரும்போது வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையில் இருந்து உயர்ந்து தன்னைச் சுற்றியுள்ளவைகளை கூர்ந்து கவனித்து உள்வாங்கிப் புரிந்துகொள்ளும் முயற்சியாகப் மாறும். நம் பார்வைகளும் மாறும்.

ஒரு நல்ல கதை அந்த கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தோடு ஒன்றி, அந்தப்பாத்திரமாகவே மாறி தன்னையே அந்தப் பாத்திரத்தில் வைத்துப் பார்க்க ஆரம்பித்து விடும்.

எனக்கும் அப்படி ஒரு கதையும் பயணமும் கிடைத்தது, சராசரி இளைஞனாக, அதிகபட்சம் வெகுஜன பத்திரிக்கைகள், வார இதழ்களில் மட்டுமே வாசிப்பு அனுபவம் இருந்த எனக்கு, முதல் தடவையாக நண்பர் பாலு மூலம் கல்கியின் "பொன்னியின் செல்வன்" என்ற வரலாற்றுப் புதினம் அறிமுகமானது, வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே என்னுடைய முழுமையான நேரத்தையும் மனதையும் அபகரித்து விட்டது. என் வேலைகளைத் தள்ளி வைத்துவிட்டு நாவலை வாசிக்கத் தூண்டியது.

வார்த்தைகளின் ஆழம், நடை, கதை மாந்தர்கள் பற்றிய விவரிப்பு என கற்பனையை கிளறி முழு சோழ வளநாட்டையும் கண் முன்னே கொண்டு வந்து நான் பேசும் வார்த்தைகளில் அதீதத் தமிழ் வந்தது, என்னை சுற்றி இருந்த உலகம் மாறியது, இந்த மாற்றம் வந்தியதேவன், குந்தவை, அருள்மொழி, பூங்குழலி, அநிருத்தர் எனஅடிக்கடி சொல்ல வைத்தது, பொன்னியின் செல்வனுடனும் கதா பாத்திரங்களுடனும் இருந்தேன், அவர்களுடனே பயணித்தேன்.

குறிப்பாக வந்தியதேவனின் அறிமுகம், அவனது சேஷ்டைகளும், இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டுவதும் அதில் இருந்து தப்புவதும் என்னை வெகுவாக கவர்ந்தது, ஆகவே இந்தப் பெயரை நான் வாங்கிய "Hero Honda Passion Pro" வண்டிக்கு "வந்தியதேவன்"எனவும் என் காமிராவிற்கு "நந்தினி" எனவும் பெயர் சூட்டினேன். (நான் வண்டிவதும் வந்தியத்தேவன் சேஷ்டைகள்  போலத்தான் இருக்கும்)

"பொன்னியின் செல்வன்"க்கு பின்னர் வாசிப்பதை தினம் மிக முக்கிய வேலையாக செய்து கொண்டேன். கல்கியின் பார்த்திபன் கனவு, சிவாகாமியின் சபதம் என் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் போது சாண்டில்யனின் கடல்புறா வாசிக்க கிடைத்தது.

”கடல்புறா” இந்த அளவு கற்பனை செய்ய முடியுமா என நினைக்க தூண்டும் எழுத்து, கப்பலை அதன் வடிவத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தி இருப்பார் சாண்டில்யன், தரை போர் முறைகளைதான் அதிக அளவிலான சரித்திர நாவல்களில் கண்டிருப்போம்,  இக் கதையின் கடற்போர் தந்திரங்களும், திருப்புமுனைகளும் கதையை படிப்பதற்குத் திகட்டாமல் செய்திருப்பார். சரித்திர நாவல் பிரியர்களுக்கு கடல் புறா கண்டிப்பாக ஒரு வித்தியாசமான விருந்தாக அமையும்.

”கடல்புறா” என் வாழ்க்கையை புரட்டி போட்ட புத்தகம் என சொன்னால் மிகை ஆகாது, ஆம் மெக்கானிக்கல் படித்துவிட்டு அதன் சார்ந்த வேலையில் இருந்த என்னை முழு நேர3டி டிசைனராக மாற்றியது கடல்புறா. என் கற்பனைகளை தூண்டி விட்டு பென்சில்களைக் கொண்டு கிறுக்கிக் கொண்டிருந்தவைகளுக்கு ஒரு வடிவத்தைத் தரத்தக்க தூண்டுகோலாய் இருந்த சண்டில்யனுக்கு என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

புத்தக வாசிப்பைத் தாண்டி கலைகள் மேல் இருந்த ஆர்வத்தில் அழிந்து போன கலைகளையும் / தொன்மைகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நான் "udhayam.in" என்ற இணைய தளத்தை ஆரம்பித்தேன், அதன் பின் தொன்மைகளையும் மரபு சார்ந்த விடயங்களை பற்றிய புத்தகங்களையும் ஆவணப்படுத்தும் நபர்கள் பலர் அறிமுகமாகினர். சிலர் எனக்கு அறிமுகமில்லாவிட்டாலும் அவர்களின் தொடர் உழைப்பை கேட்டும் அறிந்தும், படித்தும் இருக்கிறேன்.

இவர்களுடனான என் பயணம் நல்ல அனுபவத்தை தந்தது, என்னையும் பயணம் செய்ய தூண்டியது, நானும் ”மூதாதையரைத் தேடி பயணம்” என்ற பெயரில் புகைப்படத் தொகுப்பாக (http://udhayan-photos.blogspot.in/)குகைகள், குடைவரைகள், கோவில்கள், சிலைகள், கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், சமணத்தடங்களை தேடி பயணிக்க ஆரம்பித்தேன். நண்பர்களுடன் சேர்ந்து பழைய எழுத்து முறைகளான பிராமி, வட்டெழுத்துக்களுக்கு எழுத்துருக்கள்(Font) செய்து வருகிறேன். ஒரு புத்தகம் எவ்வளவு பெரிய மாற்றங்களை தந்தது, தரும் எனபதற்க்கு நானே ஒரு எடுத்துக்காட்டு.

ஆளுமைகளை பற்றி எழுதும் அளவிற்க்கு நான் ஆளுமை கொண்டவன் அல்ல, நான் ஒரு வாசகன், ரசிகன், புகைப்படக்காரன்,  ஒய்வு நேர களப்பணியாளன். இந்த ஆளுமைகள் எனக்கு முகவரி தந்தவர்கள், இந்த தொன்மையை தேடும் ஆர்வத்தில் இருக்கும் நபர்கள் எவரும் பணம், பதவிகளுக்காகத் தொன்மையை தேடிச் செல்வதில்லை, தொலைந்ததைத் தேடுவதிலேயே அவர்கள் உழைப்பையும் நேரத்தையும் அதிகமாய் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களை பற்றி நான் அறிந்ததை என் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவே இந்த தொடர் பதிவு.

டிஸ்கி :
  1. வெகுஜன மக்களுக்காக கொண்டு செல்லவே இந்த பதிவு.
  2. நான் முதலில் பார்த்த/தெரிந்தவர்களில் இருந்து வரிசைபடுத்த இருக்கிறேன்.
  3. எனக்கு நேரம் கிடைக்கு போது மட்டுமே எழுதுவேன்.
  4. எழுத்துபிழைகளுக்காக திட்டுவதாக இருந்தால் தனிமடலில் வரவும் :)

"தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும்"


தமிழின் தொன்மை மரபுகளும் ஆளுமைகளும்

தொன்மையும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பார்த்து அதன் சார்ந்த கதை, கட்டுரை, வரலாற்று புதினங்களிலும் படித்து அறிந்து இருப்போம், அதன் பின்னால் இருக்கும் உழைப்பை பற்றி நாம் பெரும்பாலும் அறிந்து இருக்க மாட்டோம்.

அதன் பற்றிய பதிவுகளை தொடரலாம் என இருக்கிறேன், இதில் நான் படித்து அறிந்த அல்லது நான் நேரில் சந்தித்து அவர்களின் உழைப்பை அருகில் இருந்து பார்த்த வரலாறு ஆசிரியர்களையும், தொன்மையை தேடிச் செல்பவர்களையும் அதன் சார்ந்த வலைப்பதிவு, இணையதளத்தையும், அறக்கட்டளைகளையும், அமைப்புகளையும் தனிநபர் முன்னேடுப்புகளையும் அறிமுகப்படுத்தலாம் என இருக்கிறேன்.

இவர்களால் பல கோவில்கள், சிலைகள், கல்வெட்டுகள், குகைகள், முதுமக்கள் தாழிகள் மற்றும் நம் தொன்மையான மரபு சார்ந்த நிறைய விடங்களை வெளிக்கொணர்ந்தும், அதை பாதுகாக்கும் பொருட்டும் உழைப்பவர்கள். என்னால் முடிந்த வரை இவர்களை என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

வாரம் இரு பதிவுகளை பகிரலாம் என இருக்கிறேன்.

Thursday, June 12, 2014

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : குடியம் குகை


பெரிய குகையில் இருந்து மலையின் மேல் குறிப்பிட்ட தூரம் சென்ற பின் பாறைகள் இடம் மற்றும் வலப்புறம் சென்றன வலப்புறம் இரு பெரும் பாறைகள் இருந்தன 20 அடி தூரத்தில் பாதை முடிவுற்றது. இடப்புறம் செல்லும் பாதையில் திரும்பி குறிப்பிட்ட தூரம் கடந்த பின் பாதைக்கான தடம் இல்லை, கையில் ஆயுதம் ஏதும் இல்லாத நிலையில் செடி கொடிகளை விலக்கி மேற்கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை, பாறைகள் மேல் ஏறலாம் என எண்ணி 20 அடி உயரம் உள்ள பாறை பிடித்து மேலே ஏறலானேன் கைவசம் இருந்த பிளாஸ்டிக் கயிறு கொண்டு மேலே ஏறியதும் காமிரா பைகளை தூக்கி கொண்டு மேலே சென்றால் ரத்த காயங்கள் மேல் விழுந்த வெயிலின் உக்கிரம் அப்போது தான் உரைத்தது.

மேலே இருந்து குகையை பார்த்த பின்பு வெற்றி என்று கத்த முடியாத அளவுக்கு தாகம் தொண்டையை அடைத்தது, மொபைலிலும் சிக்னல் இல்லை, நான் வந்து போனதற்க்கு அடையாளமாக ஏதும் விட்டு வரவிட்டாலும், புகைப்படங்கள் எடுத்து வந்தேன்.

படத்தின் இடப்பக்கம் குகையின் ஆரம்பத்தில் வெள்ளை வண்ணத்தில் புள்ளியாக தெரிவது உடன் வந்திருந்த நபர்கள் புள்ளியை ஒரு அளவுகோலாக வைத்து குகையின் நீளம், அகலம், உயரத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்.



இடப்பக்கம் பச்சை வண்ணத்தில் நடுவே தெரியும் கோடு நாங்கள் வந்த பாதை



பனோரமா வியூ
படத்தை பெரிய அளவில் பார்க்க Click செய்யவும்
 

Wednesday, June 11, 2014

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : குடியம் குகை


குகையை அடைந்து விட்டாலும் மனம் இதன் மேலே இருந்து பார்க்க வேண்டும் ஆவல் மேலோங்க கிளம்பினேன், யாரிடம் சொல்லிவிட்டு செல்லும் மனநிலையில் இல்லை குகையின் மறுமுனையில் தெரிந்த ஒற்றையடிப்பாதையை தொடர்ந்து செல்லலானேன் என்னை தொடர்ந்து சிலர் வர முயற்சித்தாலும் அவர்களால் தொடர முடியவில்லை,  பாதை மேடும் பள்ளாகவும் பாறைகள் விழுதுகள்  சூழ்ந்தும் சில இடங்களில் 2.5 அடி விட்டம் அளவிற்க்கு 3அடி முதல் 8 அடி நீளத்திற்க்கு புதர்களாலும் பாறைகளாலும் பைப் போல் நீண்டு இருக்கும், நான் ஆர்வத்தில் மேலேறினாலும் கைகளில் இரத்த கோடுகள் அதிகமாகி கொண்டிருந்தது இருந்தும் ஆர்வம் அதிகமாகி மேலே செல்லலானேன் மேலே செல்வதை விட கிழே இறங்குவது மேலும் அபாயகரமாக தெரிந்தது, எதுவானாலும் மேலே இருந்து படம் எடுத்தே ஆக வேண்டும் ஆர்வம் செல்லானேன்.












மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : குடியம் குகை

அந்த குன்றை அடுத்து எங்களது முக்கிய இலக்கான பெரிய குகையை நோக்கி நடந்தோம், சில இடங்களில் கூழாங்கல் பாதையாக இருந்தது கால்தடத்தை வைத்து வழி கண்டுபிடிக்க முடியாது. அங்காங்கே தென்படும் சிகரெட் அட்டை, ஸ்வீட் பாக்ஸ், ப்ளாஸ்டீக் காகிதங்கள், மூடிகள் வழிகாட்டின. அதையே தொடர்ந்து செல்லலானோம், பாதையில் இரு பக்கமும் சிறுபாறைகளை குவித்து அடுப்பு மூட்டிய தடம் தென்பட்டன, மலையை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் இதமான குளிர்ந்த காற்றில் களைப்புகளை மறந்தோம், குகையை நெருங்கியதும் இனம்புரியாத படபடப்பு. போகும் வழியே தூரத்தே மலையே U வடிவிற்க்குள் உட் செல்வது போல் இருந்தது, பாதை வளைந்தது, அந்த சிறிய வளைவில் நுழைந்து இடப்புறம் திரும்பியபோது, லட்சக்கணக்கான ஆண்டுகளை கடந்த குகை எங்கள் முன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது. மூதாதையர்கள் வாழ்ந்த அந்த குகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போது வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு பரவசம்.

கண்களை மூடி ஒரு கணம் லட்சம் ஆண்டுகளுக்கு முன் வேகமாகப் பயணித்தேன். வேட்டையாடுவதை தொழிலாக கொண்ட மனிதர்கள் வாழ்ந்த குகை. மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோலையும் ஆடையாக அணிந்திருந்து குகைக்குள் அமர்ந்திருந்த அந்த கற்கால மனிதர்கள். அந்த குகையின் எளிய கம்பீரம், காடு தந்த  அந்த கனத்த மௌனமும் எங்களை சூழ்ந்துகொண்டன. எதிரில் உள்ள பாறைகளில் வெயிலின் தாக்கம் இந்த குகையில் மட்டும் குளிர்ச்சி நிறைந்திருந்தது. சுமார் 250 பேர் அமரக் கூடிய அளவிற்கு இடமிருந்தது. மூன்று புறமும் பெரும் பாறைகள் சூழ்ந்திருப்பதால் மிகவும் பாதுகாப்பான இடம் என இதனைத் தேர்வு செய்திருப்பார்கள் போலிருக்கிறது. இதமான காற்றில் ஒய்வெடுக்க எண்ணி குகையில் அமரும் வேளையில் குகையின் மேலே பெரிய பெரிய தேன் கூடுகள் காற்றில் அசைந்து காவலுக்கு இருப்பதாக காட்டிக் கொண்டது, எங்கே நான் இங்கேயே இருந்துவிடுவேனோ என்று எண்ணி அவ்வப்போது என்னை பீதியூட்டின.

குகையின் உள்ளே இருந்த அம்மனை வணங்க ஒரு குடும்பம் வந்திருந்தது, அம்மன்க்கு வழிபாடுகள் நடப்பது அங்கிருக்கும் பொருட்கள் உணர்த்தியது, நேர்த்திகடனுக்காக குதிரைகள், யானைகள் செய்து வைத்திருந்தனர், லிங்க வடிவிலான கற்கள் ஒரு புறம் குவிந்து கிடந்தன, மதமேதுமில்லாத எங்களுக்கு ஏன் இத்தனை கடவுள்கள், நான் இருந்தேன் என்ற அடையாளமாக இருக்கும் எஞ்சிய என் வீட்டையாவது விட்டுவிடுங்கள் என்று மன்றாடுவது போல இருக்கும் அங்கிருந்த மண்டை அளவு உள்ள உருண்டை கற்களின் அந்த பார்வை.

U வடிவில் மலை 









குகையின் எதிரே 




மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : குடியம் குகை


குகையை நோக்கி எங்களது பயணத்தில் ஒற்றையடி பாதை காட்டுக்குள் செல்ல யாரும் முந்தி கொண்டு செல்ல இயலாது, நடக்க முடியாதவர்களையும் வேகமாக நடப்பவர்களையும் ஒன்றைணைத்து அழைத்து செல்ல வேண்டி இருந்தது, இதமான காற்று மற்றும் எங்கோ குருவிகளின் சத்தம் மட்டும் கேட்டது. உயரமான புதர்கள் நிறைந்த காடாக இருக்கிறது. பரிச்சயமான மரங்கள் எதுவும் காணப்படவில்லை. ஆங்காங்கே சில சப்பாத்தி கள்ளிச்செடிகள் தென்பட்டன.

பாதி கடந்த நிலையில் நான்கு புறமும் சிறிய பெரிய குன்றுகளுக்கு இடையில் நின்று கொண்டிருப்பது புலப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்திருப்போம்.

இடப்பக்கம் ஒரு குன்றின் மேல் கடலை உருண்டையில் ஒட்டி கொண்டிருக்கும் கடலை போல கற்கள் ஒட்டி கொண்டிருந்தது ஆரவத்தில் அந்த குன்றை நோக்கி ஏறினேன்.










மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : குடியம் குகை


கடந்த மாதம் ஒரு சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் ஒரு அழைப்பு, காலை குடியம் போறோம், வந்துவிடு என்று ரீச் பவுண்டேசனின் தலைவர் சத்தியமூர்த்தி அய்யா கூறினார். குடியம் குகையா எங்கேயோ கேள்வி பட்ட பெயராக இருக்கிறதே என ரீச் பவுண்டேசன் சந்திரா அய்யாக்கு அழைத்தேன், ஆம் போகிறோம் காலையில் 5.30க்கு வந்துவிடு என்றார்.

ரீச் பவுண்டேசனின் தலைவர் / தொல்லியல்துறையின் முன்னால் அதிகாரி சத்தியமூர்த்தி அய்யா மற்றும் இந்திய புவியியல் ஆய்வு துறையில் இருந்து பத்ரிநாதன் அவர்கள் தலைமையில் கல்வெட்டு மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள் என 30 பேர் கிளம்பினோம்.

சென்னைக்கு இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் இருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ல குடியம் என்ற ஊருக்கு சென்றோம், 10 வீடுகள் கொண்ட குக்கிராமத்தை அது. எல்லோரும் இறங்கி கொஞ்சம் இளைப்பாறினோம்.

அருகில் மலையே தெரியவில்லையே எங்கே இருக்கிறது குகை என அருகே இருந்தவரிடம் கேட்டேன் கையை மேலே தூக்கி வடக்கு பக்கம் பார்த்தவாறு மனிதர்கள் போன வழித்தடம் இருக்கும் அதைப் பின்பற்றி 7 கிமீ  நடக்க வேண்டியதுதான் என்றார்.

எல்லோரும் நடக்க ஆரம்பித்தோம், கூழாங்கல் பாதை எங்களை வழிநடத்தி அழைத்துச் சென்றது. மிகவும் அடர்த்தியான காடு அல்ல. ஆனால் சில இடங்களில் 6 அடி தொலைவிற்கு அப்பால் இருப்பது தெரியாத அளவு புதர்கள் மண்டிகிடந்தன.

இனி படங்களுடன் பயணிப்போம்

அந்த கிராமத்தில் வட்டவடிவத்தில் அமைக்கப்பட்ட குடிசை

 கார் போன தடம், இந்த தடத்தை தொடர்ந்து நடந்தோம்
 பின் ஒற்றையடி பாதையில்
 போகும் வழியில் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் மண் வண்ணம் மாறி இருந்தது.
 அங்கிருந்த வண்ணக் கல்