Wednesday, January 2, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : கிடாரிபட்டி


கீழக்குயில்குடி பயணத்தை தொடர்ந்து அடுத்த நாள் கிடாரிபட்டிக்கு போக இருந்தேன், என் மடலை தொடர்ந்து பார்த்து வரும் நண்பர் அரச குமார் என்னுடன் வர ஆவலாக இருந்தார். அவரை அழைத்து கொண்டு கிடாரிபட்டிக்கு பயணித்தேன். முன்னர் போய் ஏமாந்தது போல் அல்லாமல் முன்னமே கூகுள் மேப்பில் இடம் பார்த்து வைத்திருந்தேன், ஒரு அதிகாலையில் சென்று வந்தோம்.
--------
அழகர் கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர் மலை. மலை கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், பரந்து விரிந்து காணபடுகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இதற்குத் திருமாலிருஞ் சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகரி என பல பெயர்கள் உண்டு.  இம் மலையில் பலவகை மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து எங்கும் பசுமையாக இருக்கும்.

கோவிலின் முகப்பில் பதினெட்டாம்படி கருப்பணசாமியும், மலையின் அடிவாரத்தில் சுந்தர ராஜ பெருமாள் இருக்கிறார், 108 திவ்ய பிரதேசங்களில் ஒன்று, 4 கிமீ  மலை மேலே பழமுதிர்சோலை உள்ளது, முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று, மேலும் நூபுர கங்கை,  ராக்காயி அம்மன் கோவில் உள்ளது, சித்திரை திருவிழாவில் கள்ளழகர் இப்படி பல்வேறு சிறப்புகள் உணடு.

-------------
அழகர்கோவில் சென்றிருந்தாலும் கிடாரிபட்டி ஊர் வழியாக மேலூர் சென்றிருந்தாலும் இந்த மலையை பார்த்து இருக்கிறேன், இது தான் கிடாரிபட்டி சமணமலை என்று அறியாமல், பஞ்சபாண்டவர் மலை என தற்போது அழைக்கின்றனர், அழகர்கோவில் மலையின் தொடர்ச்சியில் தெற்க்கு பக்கம் பார்த்தவாறு அமைந்துள்ளது இந்த குகை.

அழகர்கோவில் கோட்டை சுவரில் இருந்து கிழக்கு/வலப்புறம் மேலூர் சாலையில் பயணித்து கொண்டிருந்தோம் கூகுள் மேப் மற்றும் முன்னர் சென்றவர்களின் குறிப்புகளில் இருந்து, ஒரு பாலம் கடந்ததும் இடப்புறம் செல்லும் சாலையில் பயணித்தால் ஊர் வரும் அதில் வண்டியை நிறுத்திவிட்டு 2 கிமீ க்கு மேல் மேற்கு வடக்காக நடக்க வேண்டி இருக்கும் என குறித்து வைத்திருந்தேன் அதை வைத்து அந்த ஊர் சென்ற பொது, ஊர்மக்கள் சிலர் வந்த பாதையிலேயே லதா மாதவன் பாலிடெக்னிக்க்கு முன்னால் வரும் சிறு பாலத்திற்க்கு முன்பு வரும் ஒற்றையடி பாதையில் வடப்புறமாக 3 கிமீ பயணித்தால் மலைகுகைக்கே சென்று  விடலாம், வண்டியும்  அருகிலேயே நிறுத்திகொள்ளலாம் என்றனர்.

அவ்வாறே வந்த பாதையில் பயணித்து ஒற்றையடி பாதையை கண்டுபிடித்து பயணித்தோம், இந்த பாதை என்பது மலையில் இருந்து தண்ணீர் வரும் பாதை ஆகையால் நான் இறங்கி நடக்க ஆரம்பித்தோம், அரசுவும் வண்டியை இறங்கி உருட்ட ஆரம்பித்துவிட்டார், கிட்டதட்ட 3கிமீ நடந்து செல்ல வேண்டி இருந்தது, மலையின் அடிவாரத்தை அடைந்ததும் கம்பி வேலி போட்டு இருந்தனர்.

Inline image 1

மலை ஏறுவதற்கு எதுவாக படிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மலையில் வழியெங்கும் வாகை செடிகள், மஞ்சள் பூக்கள். ஒரளவு மேல் ஏறியனதும் படிகள் மோசமாகி உடைந்து காணப்பட்டன.  படி முடிவில் குகைக்கு செல்வதற்க்கான எந்த அடையாளமும் இல்லை சில தடயங்களை வைத்தும் தண்ணிர் ஒடை வரும் வழி வைத்தும்  ஒருவாறு மேலே ஏறி கொண்டே இருந்தோம், மேலே சமதளம் போல இருந்தது அங்கு குகை போன்ற அமைப்பில் இருந்தாலும் படுக்கை ஏதும் இல்லை,மேலே இதுக்கு மேல் செல்ல வழி இல்லை வேறு எங்கு இருக்கும் என தேடிய போது மலையின் விளிம்பில் முதல் தளம் போன்று இருந்த இடத்தில் பச்சை கலர் வண்ணத்தில் கைப்பிடியுடன் படிக்கட்டு தெரிந்தது, குகையின் மேல் தளத்திற்க்கு வந்திருக்கிறோம் திரும்ப கீழே வந்து குகைக்கான பாதையை கண்டுபிடித்து செல்ல ஆரம்பித்தேன்.

மலையின் விளிம்பின் ஓரத்தின் வழியாக நடந்து சென்று, அதற்கு அடுத்துள்ள பாறைக்கு செல்ல வேண்டும், கீழே பார்த்தால் மரணபயம் நிச்சயம், அரசகுமார் அங்கேயே தங்கிவிட நான் மட்டும் கொஞ்சம் பய உணர்வோடு நேர்த்தியாக கால்வைத்து மலையின் விளிம்பில் சாகசம் செய்து பயணித்து கொண்டிருந்தேன்.

ஒரு ஆர்வத்தில் நான் சென்றாலும் மனம் முழுதும் 2000 வருடம் பின்னோக்கி பயணித்தது, இந்த இடத்திற்க்கு அவ்வளவு எளிதாக பயணிக்க முடியாது, நல்ல உடல் நலமும், எச்சரிக்கை உணர்வும், இல்லாமல் துறவிகள், முனிவர்கள் மரண பயம் பற்றி அஞ்சாது எப்படி ஏறினார்கள், இவ்வளவு அபாயத்தை கடந்து இந்த மலையில் ஏப்படி வாழ்ந்தார்கள், ஆயிரம் கேள்விகளுடன் பாறையில் பாம்பு போல ஊர்ந்து விளிம்பைக் கடந்து பாறையை அடைந்தேன். ஒரளவு சமதளமாக இருந்தது அதன் கீழே இன்னொரு இரும்பு படிக்கட்டு இருந்தது, கைப்பிடியை தொட்டதும் ஒரு ஆட்டம் ஆடியது, படியில் கரகாட்டம் ஆட விரும்பவில்லை.

அந்த  பாறையை ஒட்டியே முட்செடிகள் தெரிந்தது, ஒரு கம்பு கிடைத்தது, மறுகையில் பாதுகாப்புக்காக ஒரு கத்தி, நந்தினியை கழுத்தில் தொங்கவிட்டு அந்த முட்செடிகளை விலக்கி முன் சென்றேன், சிறிய போரட்டத்துக்கு பின்  வலப்புறம் 4-5 அடி உயரத்தில் சிறிய மண்டபம் போல் இருந்தது இது தான் நாம் தேடிய குகை போலும் என்று எண்ணி டார்ச் லைட் உதவியுடன் படுக்கைகளை தேடினேன் பத்து நிமிடமாக தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை, மீண்டும் குகையை விட்டு வெளியே வந்து குகையை கடந்து திரும்பவும் முட்செடிகளை தாண்டி பயணித்தேன். ஒரு பெரிய மரத்தை கடந்ததும் வெட்ட வெளி தெரிந்தது, வெயிலின் சூடும் உரைத்தது.

தேடிய குகையை அடைந்ததும் அசுவசப்படுத்தி கொண்டு ஆராய்ந்தேன், மலையில் பெரிய குகைத்தளத்தைப் பார்த்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை சென்ற இடங்களைவிட மிகப்பெரிய இடம். மலைகளின் பாறை சரிவின் நிழல்களில் குகை அமைந்திருந்தது, சமணப்படுக்கைகள், மருந்து அரைக்கும் குழிகள், வற்றாத சுனை, சுனை நீர் செல்லும் பாதை, குகையிலேயே சிறு அறை, பாறை சுவற்றில் அலமாரி போன்றும் இருந்தது. ஆதிகால மனிதர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் இருக்கின்றன. இந்த ஓவியங்கள் செம்பாறாங்கல் எனக்கூடிய கல்லைப் பொடியாக்கி, இலைச் சாறுகள் இணைத்து. அந்தக் கலவை மிருங்களின் வாலில் உள்ள மயிர்களைக் கொண்டு செய்த தூரிகைகளாலும், கம்புகளாலும், விரல்களாலும் வரையப்பட்டுள்ளது. சில ஓவியங்கள் தூரிகைகளாலும், புறக்கோடுகள் சீராக இல்லாத ஓவியங்கள் கம்புகளால் அல்லது விரல்களால் வரையப்பட்டிருக்க வேண்டும். இந்த ஓவியங்களின் தொன்மை தெரியாமல் இந்த இடத்தில் கண்டதைக் கிறுக்கி வைத்திருந்தனர்.


குகையின் வெளிப்பிற மேல் விளிம்பில் தீர்த்தங்கரரின் சிறிய சிற்பம் அதன் அருகே பிராமி கல்வெட்டு காணப்படுகிறது.


Inline image 3
--
குகை தென் திசையை பார்த்தவாறு மதுரையை நோக்கி அமைந்திருந்தது, இங்கிருந்து யானைமலை, மாங்குளம்/அரிட்டாபட்டி, போனமுறை தவறாக போய்வந்த மலைகளும் தெள்ள தெளிவாக காட்சியளித்தன. இங்கிருந்து தகவல் கொடுக்கவும், யாரும் வருகிறார்களா என முன்னமே பார்த்துவிட வசதியாகவும், தன்னை மறைத்து கொள்ளவும் வசதியாக இந்த குகை அமைந்திருந்தது.
Inline image 4

வெயிலின் தாக்கம் அதிகரிக்கவே கிளம்பலானேன், வந்த வழி செல்லாமல் படிகட்டு வழியாகவே சென்று அரசக்குமாரை அழைத்து கொண்டு கீழே வந்தோன்.

மலையை விட்டு இறங்கியதும் 10 அடி கொம்பை ஒரு ஆட்டிடையர்  வந்தார், அவரிடம் இந்த மலையை பற்றி கேட்டோம், இந்த மலை பஞ்சபாண்டவர்கள் மலை என்றார், பீமன் காலை அச்சு கூட இருப்பதாக சொன்னார். ஊர்மக்கள் கீழே இருந்தே கூம்பிட்டு கொள்வோம் மேலே செல்ல மாட்டார்களாம். அவர்கள் சாமிக்கு ஆகாதாம், போகும் போது வழிகாட்டிய ஒரு பெரியவரும் இதை ஆமொதித்தார். நான் சிறு வயதில் இருக்கும் போது சில சாமியார்கள் இருந்ததை பார்த்ததாகவும் கூறினார், மேலும் பெரியவர் அழகர் மலைகளில் சில இடங்களில் கற்கோவில் உண்டு என்றும் வெகு சிலரே வருடம் ஒரு முறை போய் வருவதாக கூறினார்.
----

மதுரையில் இருக்கும் போது ஒரு நாள் சுற்றுலா என்றாலே எங்களுக்கு அழகர்கோவில் தான், நான் படித்த பள்ளியில் வருடம் ஒரு முறை கூட்டி போகும் ஒரே சுற்றுல தளமும் அழகர்கோவில் மட்டுமே, ஒரு முறை கூட எங்களுக்கு இந்த இடத்தை பற்றி கூறியதில்லை.

மலைகளில் பள்ளிகளை ஏற்படுத்தி கல்வியளித்த சமணர்களை குறித்து பள்ளிகளில் எங்கும் சொல்லி தந்தது இல்லை, பாடபுத்தகங்களிலும் இல்லை, மாணவர்களுக்கு இதன்  முக்கியத்துவம் தெரியாமலலேயே போய்விடுகிறது, இந்த ஓவியங்கள், சிற்பங்கள், எழுத்துக்களின் தொன்மை தெரியாமல் இந்த இடத்தில் கிறுக்கி வைப்பதிலிருந்து காப்பாற்ற வேண்டும்.  அதிலும் இதுபோன்ற இடங்களுக்கு வருபவர்கள் சரித்திரத்தில் இடம்பெறும் நோக்கில் தங்கள் பெயர்கள் மற்றும் காதல் சின்னங்களை பதிந்து செல்கின்றனர். இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற கிறுக்கல்களைக் காண முடியும். இதுபோன்ற இடங்களின் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களுக்கும் தெரிவதில்லை. இது போன்ற இடங்களின் முக்கியத்துவத்தை அங்குள்ள அந்தந்த ஊர்க்காரர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும் அருகில் உள்ள கல்விக்கூடங்களிலிலும் சொல்லித் தருவதின் முலம், அரசு சுற்றுலாத்துறை மூலமும் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கொண்டு வந்தால் தான்  இந்த இடங்களை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.

பிக்காசவில் படங்களை காண
https://picasaweb.google.com/109292260549096695317/Kidaripatti

No comments:

Post a Comment